பிரளயம் காத்த பிள்ளையார் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Piralayam Katha Pillaiyar Kovil Enkullathu Theriyumaa?
Piralayam Katha Pillaiyar Kovil Enkullathu Theriyumaa?https://www.alayathuligal.com
Published on

விநாயகர் என்றாலே அனைவருக்கும் தனி பிரியம்தான். தெருவுக்கு தெரு அரசமரத்தடி முதல் சிறு கோயில்கள் வரை நாம் வழிபடும் தெய்வங்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார் கணபதி. தடைகளை நீக்கி காரியம் வெற்றி பெற வேண்டுமெனில் விக்னங்களை விலக்கும் விநாயகரை வழிபட்டால் போதும். விநாயகரின் திருவிளையாடல்கள் நிறைய உண்டு. அதில் பிரளயம் காத்த விநாயகரின் பெருமையை சொல்லி மாளாது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு வடமேற்கு திசையில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புறம்பயம் எனும் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் விநாயகருக்குத்தான், ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்று பெயர். முற்காலத்தில் இத்தலம், ‘புன்னாகவனம்’ என பெயர் பெற்று இருந்தது.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பெருவெள்ளம் வந்து அழிவை ஏற்படுத்தும். இந்தப் பெருவெள்ளமே பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு கிருத யுகத்தின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. அப்போது பிரளயத்தில் இருந்து இந்த உலகத்தைக் காத்தருள திருவுள்ளம் கொண்ட ஈசன், விநாயகப் பெருமானிடம் பிரளயத்தில் இருந்து இத்தலத்தைக் காத்தருளுமாறு திருவாய் மலர்ந்தார்.

தந்தையின் உத்தரவுப்படி  விநாயகப் பெருமானும் இத்தலம் நோக்கி வந்த ஏழு கடல்களின் வெள்ளப்பெருக்கை ஒரு கிணற்றுக்குள் அடக்கி உலகத்தை  பிரளயத்திலிருந்து காப்பாற்றினார். அப்போது வருண பகவான் விநாயகர் பெருமானை சங்கு, கிளிஞ்சல், கடல் நுரை போன்றவற்றைக் கொண்டு உருவாக்கிப் படைத்து, ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்ற திருநாமம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பிரளய வெள்ளம் ஊரை அழிக்காமல் நின்றதால் இத்தலம்,  ‘புறம்பயம்’ அதாவது திருப்புறம்பயம் என்று  பின்னர் அழைக்கப்பட்டது.

இத்தலத்தில் உறையும் ஈசன், ஸ்ரீ சாட்சிநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை இட்சுரசவாணி (கரும்பனைய சொல்லம்மை) எனவும் அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கொண்டாடப்படும்  விநாயகர் சதுர்த்தியன்று  இரவும் பகலும் அளவில்லாத தேன் கொண்டு இந்தப் பிள்ளையாருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். வேறு சமயங்களில் எப்பொழுதும் எப்பொருளாலும் இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியம் வாய்ந்ததே!
Piralayam Katha Pillaiyar Kovil Enkullathu Theriyumaa?

அன்று ஒரு நாள் அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் இந்த விநாயகப்பெருமானின் திருவருவம் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் உறிஞ்சி விடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். விநாயகர் திருவுருவம் வெளிர் மஞ்சள் நிறம் அதாவது சந்தன நிறத்தில் இருக்கும். தேன் அபிஷேகம் செய்த பிறகு இவரின் மேனி செம்பவள நிறமாக ஜொலிப்பது விசேஷம்.

விநாயகர் சதுர்த்தி அன்று இரவு இத்தல கணபதியை தேன் அபிஷேகம் செய்து தரிசித்து பிரார்த்தனை செய்தால் அடுத்த வருஷம் தேன் அபிஷேகம் வருவதற்குள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரளயத்திலிருந்து இந்த ஊரை காத்தவராகையால் எவ்வளவு பெருந்துன்பம் வந்தபோதிலும் அதனை விநாயகர் நீக்கி அருள்வார் என்கின்றனர் இவரின் அருள் பெற்று உணர்ந்தவர்கள். இந்தத் திருத்தலம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com