பித்ரு தோஷத்தைப் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரத் தலங்கள்!

Pithru Thosha Parikara Thalangal
Pithru Thosha Parikara Thalangal
Published on

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், 'தில ஹோமம் செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தை போக்கும். பித்ரு தோஷ பரிகாரத் தலங்கள் சிலவற்றை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ளது ராமேஸ்வரம். இங்குள்ள இராமநாதர் கோயில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரம்மஹத்தி தோஷம் நீங்க ஸ்ரீ ராமபிரான் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது. ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இதில் அக்னி தீர்த்தம் என்பது ராமேஸ்வரம் கடலைக் குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்ட தீர்த்தமாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் ராமேஸ்வரம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் 'தில ஹோமம்' செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். 'திலம்' என்பதற்கு 'எள்' என்று பொருள்.

இதையும் படியுங்கள்:
முத்து முத்தாய் முகம் வியர்க்கும் அதிசய அம்மன்! இதன் ரகசியம் தெரியுமா?
Pithru Thosha Parikara Thalangal

திலதர்ப்பணபுரி: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் சென்றால், 'திலதர்ப்பணபுரி' என்ற ஊர் வரும். இங்கு முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில்தான்
ஸ்ரீ ராமபிரான் தனது தந்தை தசரதர், கழுகு பறவையான ஜடாயு ஆகியோருக்கு தர்ப்பணம் கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இதன் காரணமாக இந்த ஊர், 'திலதர்ப்பணபுரி' என்றானது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் தில தர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

திருப்புவனம்: பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் சுச்சோதி என்ற மன்னன் தன்னுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருப்புவனம் வந்து இங்குள்ள வைகை ஆற்றங்கரையில்  வேண்டுதல் செய்தார். இங்கு இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால் அவர்களுக்கு பாப விமோசனம் கிடைக்குமாம்.

இதையும் படியுங்கள்:
பாவம் தீர்க்குமா கங்கை நீராடல்: சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் மர்மம்!
Pithru Thosha Parikara Thalangal

ஸ்ரீவாஞ்சியம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 'காசியை விட நீசம் அதிகம்' என்று கிசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் தலம் இது. இது சோழ நாடு காவிரி தென்கரை தலங்களில் அமைந்துள்ள 70வது சிவத்தலமாகும். ஸ்ரீவாஞ்சியம் ஒரு புனிதமான பித்ரு தர்ப்பண தலமாகும்.

உலக உயிர்களை எடுக்கும் எமதர்மராஜா தனது பதவியில் ஏற்பட்ட துயரத்தைப் போக்க இத்தல இறைவனை வழிபட்டதால் அவரது பாவ தோஷங்கள் நீங்கிய தலம். இது பித்ருக்களின் தோஷங்களை நீக்குவதோடு, காசிக்கு ஒப்பான புனிதத் தன்மை உடையதாகவும் இத்தலம் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வருடம் முழுக்க கவசத்தோடு காட்சி தரும் ஈசன் 3 நாட்கள் மட்டும் சுயம்பு மூர்த்த தரிசனம்!
Pithru Thosha Parikara Thalangal

கோயம்பேடு: சென்னையில் பித்ரு தோஷம் நீக்கும் முக்கிய கோயில்களில் கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் ஒன்றாகும். ஸ்ரீ ராமர், சீதையை பிரிந்த காலத்தில் சீதைக்கு லவ, குசன் பிறந்தார்கள். தந்தையை எதிர்த்ததால்  அவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தைப் போக்க அவர்கள் குறுங்காலீஸ்வரர் கோயிலில் வழிபட்டு நிவர்த்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இக்கோயில் பித்ரு தோஷத்தை போக்கும் தலமாகக் கூறப்படுகிறது.

வால்மீகி முனிவர் இந்த இடத்தில் தவம் செய்து பித்ரு தோஷம் நீங்கும் தலமாக இக்கோயில் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பித்ரு தோஷத்தைப் போக்க பல பக்தர்கள் வருகின்றனர்.

ஆயிரம் பிரதோஷம் தரிசனம் செய்த பலனை இந்தக் கோயிலில் தரிசனம் செய்வதன் மூலம் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய நதிகள், கடல்கள், அருவிகள் என அனைத்து இடங்களிலும் பித்ரு தோஷப் பரிகாரத் தலங்கள் உள்ளன. அந்தந்த இடங்களுக்குச் சென்று பாவ நிவர்த்தி செய்து புண்ணியப் பலன்களை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com