
புதிய கீதை
அர்ஜுனன் கேட்கிறான் :
'பரந்தாமா! எனது காண்டீபம் நிமிர்ந்து நிற்கின்றது. அதோ அங்கே நிற்பவர்கள் எல்லோருமே என் சகோதரர்கள் அவர்கள் மீது கணை வீசும் படியா எனக்கு கட்டளையிடுகிறாய்? என் கைகள் நடுங்குகின்றன இந்த பாவத்தைச் செய்யும்படி என்னை ஏன் தூண்டுகிறாய்?'
பரந்தாமன் சொல்கிறான், 'பல்குனா! உன் மயக்கம் நியாயமன்று. அவர்கள் உன் சகோதரர்கள் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல. அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் ஆகவே, அவர்கள் மீது கணையெறிவது தான் உனக்கு நியாயம்.
அர்ஜுனன் கேட்கிறான், 'ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்களை அழிப்பது நியாயமா கண்ணா?
பரந்தாமன் சொல்கிறான், 'அதுதான் தர்மம். ஏராளமான மக்கள் எதை விரும்புகிறார்களோ? அதை தானே ஒரு சத்ரியன் செய்வான். ஏராளமான மக்களால் வெறுக்கப்படுபவர்களை நீயும் சேர்ந்து வெறுப்பது தானே தர்மம். என்னைப்பார் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தருமன் சூதாடினானே அப்போது நான் துணைக்கு வந்தேனா?
நீங்கள் எதிர்க்கட்சியான உடனே வந்து விட்டேன். என்னை எல்லோருமே நேசிக்கிறார்கள். ஏன் எப்போதுமே எதிர்கட்சியில் இருப்பவனே நேசிப்பது தான் ஜனங்களின் பெயரால் செய்ய முடியும். இப்போது நீ செய்வது தவறே! ஆனாலும். உன்னை தான் ஜனங்கள் விரும்புவார்கள் காண்டீபத்தில் கணையை ஏற்று .
அர்ஜுனன் கேட்கிறான், 'மாதவா! நாளைக்கு நானே ஆட்சிக்கு வந்தாலும் என் கதியும் இதுதானா?'
பரந்தாமன் சொல்கிறான், 'சந்தேகம் என்ன நாளை நீ ஆட்சிக்கு வந்தால், நானே கௌரவர் பக்கம் சேர்ந்தாலும் சேர்ந்து விடக்கூடும். பெருவாரியான ஜனங்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும்?'
அர்ஜுனன் சொல்கிறான், 'நல்லது பரந்தாமா! நான் இன்று தவறு செய்தாலும், அதை ஜனங்களின் பெயரால் செய்துவிட முடியும். அல்லவா மிகவும் சரி என் கணை இன்று யார் மீதாவது பாய்ந்தாக வேண்டும். அடிக்கடி இத்தகைய போர்க்களங்கள் தோன்றி அமைதியைக் கெடுக்கக் கூடாது என்று பெருவாரியான ஜனங்களின் விருப்பத்தை நான் எப்படி மீற முடியும்?'
பரந்தாமன் கேட்கிறான், 'அர்ஜூனா நீ என்ன சொல்கிறாய்?'
அர்ஜுனன் சொல்கிறான், 'எப்போதும் எதிர்க்கட்சிகளையே ஆதரிக்கும் உன் செயல்தானே இந்த போர்க்களங்களுக்கெல்லாம் காரணம். இப்போது பெருவாரியான ஜனங்களின் விருப்பப்படி என் காண்டீபம் உன்னை குறி வைக்கிறது!' கண்ணன் மூர்ச்சை அடைகிறான்.
(கவிஞர் கண்ணதாசன் தோட்டத்து பூக்கள் என்ற நூலில் இருந்து.)