கோதாவரி நதி நாசிக் வழியாகப் பாய்கிறது. அதன் வடக்கு பகுதி பஞ்சவடி என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமரும் சீதையும் லட்சுமணனுடன் சில காலம் பஞ்சவடியில் தங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பஞ்சவடி புனித முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு ஐந்து ஆல மரங்கள் உள்ளன. எனவே இப்பகுதி, ‘பஞ்சபட்’ என்று அழைக்கப்படுகிறது. சீதா கும்பா அருகில் சீதா சில காலம் தங்கியதாகக் கூறப்படுகிறது.
‘தபோவன்’ என்றால் தியானம் மற்றும் தவம் செய்ய ஒதுக்கப்பட்ட வளாகம் என்று பொருள். பஞ்சவடியில் தவம் செய்ய இப்படி ஒரு பிராகாரம் இருப்பதால் தபோவன் என்று இது பெயர் பெற்றது. முனிவர்கள் பசுமையான இயற்கைக்கு அருகாமையில் தியானம் செய்து வந்தனர். ஸ்ரீராமரின் சகோதரரான லட்சுமணன் மற்றும் அனுமன் இங்கு தங்கியிருந்தனர். ராவணன் சகோதரியான சூர்ப்பனகையின் மூக்கை இங்குதான் வெட்டினான். இந்த இடத்தில் லட்சுமணன் மற்றும் அனுமன் கோயில்கள் உள்ளன. இன்றும் கோதாவரி மௌனமாக சலசலக்கும் நீரோடை. நீளமான அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் காட்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன் நெருக்கமாக இருப்பதால் இந்த இடம் மனதைக் கவருகிறது.
ஆற்றங்கரையில் உள்ள கற்பாறைகளில் உள்ள குகைப்பிளவு பிரம்மயோனி என்று அழைக்கப்படுகிறது. மிக அருகில் கபிலர் தீர்த்தம் உள்ளது. கோதாவரியின் வலது கரையில் பதினொரு பாறை குகை இடங்கள் உள்ளன. அங்கு ரிஷி முனிகள் சடங்குகளுக்காக தங்கி இருக்க வேண்டும். இங்கு கோபாலகிருஷ்ணன் மற்றும் லட்சுமி நாராயணர் கோயில்கள் உள்ளன. தவிர, இங்குள்ள புகழ்பெற்ற கோசலை 1904ல் கட்டப்பட்டது. பழங்காலத்தில் இந்த நிலம் ஸ்ரீராமரின் பாத ஸ்பரிசத்தால் புனிதமானது.
சீதா கும்பா (குகை) பஞ்சவடியில் உள்ள ஐந்து ஆலமரங்களுக்கு அருகில் உள்ளது. மிகவும் குறுகிய படிக்கட்டுகளின் உதவியுடன் ஒருவர் குகைக்குள் நுழைய முடியும். குகையில் ஸ்ரீராமர் லட்சுமணன் மற்றும் சீதை சிலைகள் உள்ளன. இடது புறம் சிவலிங்கம் கொண்ட குகைக்குள் நுழையலாம்.
பஞ்சவடியில் மிக முக்கியமான இடம் ராம்குண்ட். ராமர் இங்கு குளித்ததாக நம்பப்படுவதால் இது இப்படி அழைக்கப்படுகிறது. இந்த குண்டத்தில் மூழ்கியிருக்கும் அஸ்தி உடனடியாக தண்ணீரில் உறிஞ்சப்படுகிறது. இந்தப் புனித குண்டத்தில் நீராடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பஞ்சவடியில் வெள்ளை ராமர் கோயில், கறுப்பு ராமர் காலாராம் கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. இதில் வெள்ளை ராமர் சலவை கல்லால் ஆனவர். கறுப்பு ராமர் கோயில் இங்கு மிகவும் பிரபலம். இந்தக் கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஸ்ரீராமர், சீதை, லட்சுமணனை கறுப்பு கல்லில் அழகு பொங்க அமைத்துள்ளனர். இங்கு ஸ்ரீராமர் பொன் வண்ண மீசையுடன் காட்சி தருவது கொள்ளை அழகு. மஞ்சள், குங்குமம், எள், சர்க்கரை ஆகியவை ஸ்ரீராமருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன.
இக்கோயிலின் உள்ளே நாசிக் சார்ந்த இராமாயண காட்சிகளை அழகிய ஓவியங்களாக காணலாம். ஸ்ரீராமரின் வனவாசத்தை ஞாபகப்படுத்தும் வகையில் 14 படிகள் இங்கு உள்ளன.