பானைக்குக் கிடைத்த மோட்சம்!

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி
பானைக்குக் கிடைத்த மோட்சம்!
Published on

ண்ணனுக்கு குறும்பு செய்வது என்றால் கொள்ளைப்பிரியம். குழந்தைப் பருவத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் அனைவரிலும் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான நண்பன் ததிபாண்டன் என்பவனே. ததிபாண்டன் சூது வாது ஏதும் அறிவாதவன். இதனாலேயே ததிபாண்டனை கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்ணன் குறும்புகளைச் செய்யும்போதெல்லாம் ததிபாண்டனும் உடனிருப்பான். கண்ணன் தப்பித்துக் கொள்வான். ததிபாண்டன் மாட்டிக்கொள்ளுவான்.

ஒருநாள் ததிபாண்டன் தனது வீட்டுத் தோட்டத்தில் கன்றுகளை கயிற்றில் கட்டிக் கொண்டிருந்தான். அவை தாய்ப்பசுவிடம் சென்று பாலை அருந்திவிடாமல் பார்த்துக் கொள்ளும்படி ததிபாண்டனின் தாயார் கட்டளையிட்டிருந்தாள். ததிபாண்டனை சிக்கலில் மாட்டிவிட கண்ணன் திருவுள்ளம் கொண்டான். கண்ணன் ததிபாண்டனை அழைத்தான்.

“கண்ணா, அம்மா என்னை காவலுக்கு வைத்திருக்கிறாள். அதனால் என்னால் அங்கே வர முடியாது” என்றான்.

அவன் வரமாட்டான் என்பதை அறிந்துகொண்ட கண்ணன், ததிபாண்டனின் அருகில் வந்து, “அந்த வைக்கோல் போருக்குப் பின்புறத்தில் நிறைய இனிப்புகளை வைத்திருக்கிறேன். அவற்றை என் பிரியமான நண்பனான உனக்குத் தருவதற்காகத்தான் உன்னை அங்கே அழைத்தேன். நீ என்னவென்றால் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாய்” என்கிறான்.

“இனிப்பா?” ததிபாண்டனின் கண்முன்னே இனிப்புகளைத் தோன்றச்செய்து அவன் ஆவலை அதிகப்படுத்தினான் கண்ணன்.

உடனே அங்கிருந்து ஓடிச்சென்று இனிப்புகளை எடுத்து மகிழ்ச்சியோடு சாப்பிடத் தொடங்கினான். இதுதான் சமயமென்று அங்கே வந்த கண்ணன் கன்றுகளை அவிழ்த்து விட, அவை துள்ளிக்குதித்து தாய்ப்பசுக்களிடம் ஓடிச் சென்று பாலைக் குடிக்க ஆரம்பித்தன.

அப்போது அங்கே வந்தாள் ததிபாண்டனின் தாய். கன்றுகள் தாய்ப்பசுவிடம் பாலைக் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு ததிபாண்டனின் மீது அளவிடமுடியாத கோபம் உண்டானது. ததிபாண்டன் அங்கே இல்லாததை உணர்ந்து, ஒரு கொம்பைக் கையில் எடுத்துக்கொண்டு அவனைத் தேடிச் சென்றாள்.

வைக்கோல் போருக்குப் பின்னே இனிப்புகளைத் தின்று கொண்டிருந்த ததிபாண்டனைக் கண்ட அவன் தாயார், கொம்பினால் அவனை நையப் புடைத்தார்.  இப்படித்தான் கண்ணன் பலமுறை குறும்புகளைச் செய்து நண்பர்களை மாட்டிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

‘கண்ணன் தன்னை இப்படி அடி வாங்க வைத்துவிட்டானே’ என்று நினைத்த ததிபாண்டன், அவனைப் பழிவாங்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ருநாள் வழக்கம்போல ஒரு கோபிகையின் வீட்டுக்குச் சென்று தயிர்பானையினை உடைத்தான் கண்ணன். இதைப் பார்த்துவிட்ட கோபிகை, கண்ணனைத் துரத்திக் கொண்டு வந்தாள். அவளிடம் மாட்டிக்கொள்ளாமல் ஓடிச்சென்று தப்பித்துக் கொண்டான் கண்ணன். அவள் உடனே யசோதையிடம் சென்று நடந்த விஷயத்தைக் கூறி, கண்ணனைக் கண்டிக்கும்படிக் கேட்டுக் கொண்டாள்.

கோபிகையை அழைத்துக் கொண்டு சென்று கண்ணனைத் தேட ஆரம்பித்தாள் யசோதை. தன்னைத் தேடி வரும் தாயிடமிருந்தும் கோபிகையிடமிருந்தும் தப்பிக்க விரும்பிய கண்ணன், ஓட ஆரம்பித்தான். ஒரு வீட்டினுள் புகுந்தான். அங்கே பெரிய பெரிய பானைகள் இருப்பதைக் கண்டான். ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தான். எல்லா பானைகளிலும் தயிர் நிறைந்திருந்தது. ஒரே ஒரு பானை மட்டும் காலியாக இருந்தது. அதற்குள் குதித்து மறைந்து கொண்டான் கண்ணன்.

இதை கவனித்துவிட்ட ததிபாண்டன் அங்கே ஓடி வந்து, “கண்ணா, ஏன் இதற்குள் மறைந்து கொண்டிருக்கிறாய்?” என்றான்.

“ததிபாண்டா, என் தாயாரும் கோபிகைப் பெண் ஒருத்தியும் என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து அவர்களிடம் என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே” என்று கண்ணன் ததிபாண்டனிடம் கெஞ்சினான்.

“அப்படியா விஷயம்? என்னை எத்தனை முறை வம்பில் மாட்டிவைத்து அடி வாங்க வைத்திருக்கிறாய்? எனக்கொரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. உன்னை நிச்சயம் மாட்ட வைத்து அடிவாங்கித் தருவேன்” என்று ததிபாண்டன் மகிழ்ச்சியோடு சொன்னான்.

“ததிபாண்டா, நீ என் ஆத்ம நண்பனல்லவா? உன்னைப் போன்ற நல்லவர் இங்கு யார் இருக்கிறார்? என்னை நீ காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றினால் உனக்கு நன்மைகள் செய்வேன். யாருக்கும் சுலபத்தில் கிடைக்காத பாக்கியத்தை உனக்குத் தருவேன்” என்றான் கண்ணன்.

கண்ணன் இப்படிப் பேசியதைக் கேட்ட ததிபாண்டன், மனம் மாறினான். தனது நண்பன் கண்ணனைக் காப்பாற்ற முடிவு செய்தான். கண்ணனைத் தேடிக்கொண்டு யசோதையும் கோபிகைப் பெண்ணும் அங்கே வந்தார்கள். உடனே ததிபாண்டன் அந்தப் பானையின் வாய் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். இருவரும் ததிபாண்டனிடம் வந்து, “ததிபாண்டா, கண்ணனை நீ பார்த்தாயா?” என்றனர்.

“இல்லையே, கண்ணன் இங்கே வரவேயில்லையே” என்றான்.

“பொய் சொல்வது பாவம். உண்மையைச் சொல். கண்ணன் இருக்கும் இடம் உனக்கு நிச்சயம் தெரியும்” என்றனர் அவர்கள்.

தனது பிரியமான நண்பனைக் காப்பாற்ற மீண்டும் பொய் சொன்னான் ததிபாண்டன். அதைக்கேட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்ற பிறகும் ததிபாண்டன் பானை மீதிருந்து இறங்காமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தான். பானைக்குள் இருந்த கண்ணனுக்கு மூச்சு முட்டியது.

“டேய்… மூச்சு முட்டுகிறது. கீழே இறங்கு” என்ற கண்ணன் தனது கையிலிருந்த புல்லாங்குழலால் ததிபாண்டனை ஒரு குத்து குத்தினான்.

“கண்ணா. நீ இந்தப் பானைக்குள்ளிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சத்தைத் தர வேண்டும்” என்றான் ததிபாண்டன்.

“பொய் சொன்னவனுக்கு ஏதுடா மோட்சம்?” என்றான் கண்ணன்.

“இல்லை, நீ எனக்கு மோட்சம் தந்தே ஆக வேண்டும். தருகிறேன் என்று சொன்னால் மட்டுமே நான் உன்னை வெளியே வரவிடுவேன்” என்று ததிபாண்டன் பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.

“சரி… உனக்கு மோட்சம் தருகிறேன். பானை மீதிருந்து கீழே இறங்கு” என்றான் கண்ணன். ஆனாலும், ததிபாண்டன் பானை மீதிருந்து இறங்கவில்லை.

“கண்ணா, எனக்கு மட்டும் மோட்சம் தந்தால் எப்படி? உன்னைக் காப்பாற்றிய இந்த பானைக்கும் நீ மோட்சத்தைத் தர வேண்டும். அப்போதுதான் நான் பானை மீதிருந்து இறங்குவேன்” என்றான்.

கண்ணனுக்கு வேறு வழியில்லை. ‘பானைக்கும் மோட்சம் தருகிறேன்’ என்று சொன்னான். இதன் பிறகு ததிபாண்டன் பானை மீதிருந்து இறங்க, கண்ணன் பானைக்குள்ளிருந்து வெளியே வந்தான்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த கண்ணன், புஷ்பக விமானத்தை வரவழைத்தான். அதில் ததிபாண்டனையும் பானையையும் ஏற்றி வைகுண்டத்துக்கு அனுப்பி வைத்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com