

பொதுவாகவே, திருஷ்டி கழிப்பதில் பூசணிக்காய்க்கு முன்னுரிமை உண்டு. இதை, ‘சைவ பலி’ என்றும் சொல்லுவார்கள். பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைத்தால், ஒருவரின் கெட்ட நேரம் விட்டு விலகி விடும் என்பது நம்பிக்கை. பூசணிக்காயில் திருஷ்டி கழிக்கக்கூடிய ஒரு புதிய முறையை, தாந்த்ரீக பரிகாரத்தை பின்பற்றி ஒருமுறை திருஷ்டி கழித்துப் பாருங்கள். உங்களைப் பிடித்த துரதிர்ஷ்டம் விட்டு விலகும். வெற்றிகள் வந்து குவியும். கண் திருஷ்டியும் உங்களை விட்டு நீங்கும்.
பூசணிக்காயில் திருஷ்டி சுற்றும் முறை: கூடுமானவரை பூசணிக்காயை வாங்கி முழுசாக சுற்றுவதுதான் நல்லது. சிலர் அதை கத்தியால் வெட்டி, அதன் உள்ளே சிவப்பு நிற குங்குமத்தைப் போட்டு, அதனுடன் சில நாணயங்களையும் உள்ளே போட்டு அதற்குப் பிறகு திருஷ்டி சுற்றி உடைப்பார்கள். ஆனால், இது தவறு. பூசணிக்காயை அறுத்துவிட்டால் அதனுடைய உயிர், திருஷ்டி சுற்றும் முன்பே போய்விட்டது என்று அர்த்தம்.
பிறகு, அந்தப் பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைப்பதில் எந்த ஒரு பலனும் முழுசாகக் கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, வாங்கிய பூசணிக்காயை கழுவி விட்டு தரையில் வைத்து விடுங்கள். பிறகு அந்தப் பூசணிக்காயை நான்கு முறை தாண்ட வேண்டும். இப்படி நான்கு திசைகளில் இருந்தும் தாண்ட வேண்டும்.
அதிலும் முன்பக்கமாகத்தான் காலை வைத்துத் தாண்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலை முன்னாடி வைத்து தாண்டி விட்டு, இன்னொரு காலை பூசணிக்காய்க்கு பின்பக்கமாக வைத்து தாண்டக் கூடாது. அது தவறு. வலது கால் முன்னிருந்துதான் எடுத்து வைத்துத் தாண்ட வேண்டும்.
இப்படி நான்கு திசைகளிலும் நான்கு முறை பூசணிக்காயை தாண்டி விட்டு அதன் பிறகு முழு பூசணிக்காயைச் சுற்றி வீட்டிற்கோ அல்லது கடைக்கோ திருஷ்டி கழித்தால் முழு பலனும் கிடைக்கும்.
கண் திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாம் உங்களை விட்டு ஓடோடி விடும். இதேபோல அமாவாசை தினங்களிலும் திருஷ்டி கழித்துக் கொள்ளலாம். இந்த முறைப்படி பூசணிக்காயைச் சுற்றி உடைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டியில் இருந்து விடுபட்டு நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.