

தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகலாகவும் (உத்தராயணம்) ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் (தட்சிணாயனம்) இருக்கும். எனவே, மார்கழி மாதம் தேவர்கள் விழிக்கத் தயாராகும் நேரம்.
இம்மாதம் பீடுடைய மாதம். இம்மாதத்தில்தான் ஹேமந்த ருது தொடங்குகிறது. எங்கும் பரங்கி, செவ்வந்தி, மஞ்சள் என மங்கலகரமாகக் காட்சி தருவதால் இம்மாதம் பீத மாதம் என்று அழைக்கப்படுகிறது. பீதம் என்றால் மஞ்சள் என்று பொருள். மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் பௌர்ணமி நிலவு இம்மாதத்தில் சஞ்சரிக்கும். அதுவே மார்கசீரிஷம் என்றாகி மார்கழியானது.
ஸ்ரீகிருஷ்ண பராமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழி’ என இம்மாதத்தை பெருமைப்படுத்தியுள்ளார். கோவர்த்தனகிரியை தூக்கி கோவிந்தன் என்ற பட்டப் பெயரை பகவான் கிருஷ்ணர் பெற்றது மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்றுதான்.
சிதம்பரம் கோயிலில் சிவகங்கை தீர்த்தத்தில் மார்கழி மாத திருவாதிரையன்று நீராடினால் புண்ணியம் கிட்டும். அன்று கங்கை இந்த தீர்த்தத்தில் கலப்பதாக ஜதீகம்.
பகவான் கண்ணனை குசேலர் ஆவலுடன் தரிசனம் செய்த நாள் மார்கழி மாத முதல் புதன்கிழமை. அன்று கண்ணனை பூஜித்து அவல் நைவேத்தியம் செய்ய, செல்வங்கள் யாவும் சேரும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி நாள் வைகுண்ட ஏகாதசியாகும். கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு கீதாபபேதசம் செய்ததும் அன்றுதான்.
‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்ற இரண்டு நட்சத்திரங்கள் திருவோணம், திருவாதிரை ஆகியவை. இதில் திருவோண நாயகனாம் திருமாலுக்கு வரும் வைகுண்ட ஏகாதசி விழாவும், திருவாதிரை நாயகன் தில்லை கூத்தனுக்கு வரும் ஆருத்ரா தரிசனமும் பிரசித்தி பெற்றவை.
அனுமன் ஜயந்தியும் மார்கழி அமாவாசையில் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாகக் கொண்டாடப்படுவதால் அந்த மாதத்தில் செய்யப்படும் தெய்வ வழிபாடுகள் மிகுந்த நன்மை தரும். தெய்வ வழிபாட்டிற்கு இடையூறாக இருக்கக் கூடாதென மார்கழியில் குடும்ப விசேஷங்கள் எதையும் நடத்துவதில்லை.