அர்ஜுனன் தனது மகன் அபிமன்யு மரணத்தால் மிகுந்த மன வருத்தத்தோடு இருந்தான். பாரதப் போரின் 13ம் நாள் இரவு அதே வருத்தத்துடன் உறங்க சென்ற அர்ஜுனன், கண்ணனோடு தாமும் கயிலாயம் செல்வதாக ஓர் கனவு கண்டான். கனவில் அவனுக்கு, ‘தன்னை விட சிவ பக்தியில் சிறந்தவர் ஒருவரும் இல்லை. அண்ணன் பீமன் செய்வதெல்லாம் வெறும் வேஷம்தான். பீமன் முரட்டு ஆள். அவனுக்கு பக்தியே கிடையாது’ என்பது போன்ற எண்ணங்கள் எழுந்தன. தனது பக்தியினால் ஈசனிடம் தனக்கு தனி சிறப்பு கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் கயிலாயம் செல்கையில் அவனுக்கு ஏற்பட்டது.
அர்ஜுனனின் மனதில் உண்டான கர்வத்தை மாயக்கண்ணன் அறிய மாட்டானா என்ன? உடனே கண்ணனின் லீலை துவங்கியது. அப்போது ஒருவன் ஒரு பெரிய வண்டி நிறைய வாடிய மலர்களைக் கொண்டு வருவதைப் பார்த்தான் அர்ஜுனன். ‘‘இது என்ன?’’ என்று வண்டி இழுத்து வருவபரை அவன் கேட்டபோது, வண்டிக்காரன் தாம் செய்யும் வேலையில் கருத்தாக இருந்ததால், பதிலே கூறவில்லை. உடனே கண்ணனும் அர்ஜுனனும் அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைப் பார்க்க அவன் பின்னே சென்றார்கள்.
அங்கு ஏற்கெனவே மலைபோல் குவிந்திருந்த வாடிய மலர் குவியலுடன் புதிதாகக் கொண்டு வந்த மலர்களையும் கொண்டுபோய் கொட்டுவதைப் பார்த்தார்கள். இதேபோன்ற நூற்றுக்கணக்கான வண்டிகளில் வாடிய மலர்களைக் கொண்டு வந்து கொட்டடியபடி இருந்தனர். அதைப் பார்த்தவுடன் அர்ஜுனனுக்கு அதன் உண்மையை அறிய வேண்டும் என்ற அடங்காத ஆவல் உண்டாயிற்று.
ஆவல் அடங்காத அர்ஜுனன் மீண்டும் வேறு ஒருவரிடம், ஏற்கெனவே கேட்ட அதே கேள்வியைக் கேட்டான். அதற்கு பதில் சொல்ல யாருக்கும் நேரமின்றி அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் கழிந்த பின் ஒரே ஒருவன் மட்டும் கோபத்துடன் திரும்பி அர்ஜுனனிடம், "ஐயா எங்களுக்கே வேலை அதிகம். நீர் எங்களை இதுபோன்று கேள்வி கேட்டு தடை செய்வது சரி இல்லை. 500 வண்டி நிர்மால்ய மலர்களைத்தான் நாங்கள் இங்கு கொண்டு வந்து கொட்டி இருக்கிறோம். இன்னும் 500 வண்டி மலர் சிவபெருமானது பாதத்தில் கிடக்கின்றன. நேற்று பாண்டவ வீரனாகிய பீமசேனன் என்பவன் செய்த பூஜையில் விழுந்த மலர்கள்தான் இவை. அவன் இன்று பூஜை செய்யத் தொடங்குவதற்கு இன்னும் சில நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் நாங்கள் இந்த நிர்மால்ய புஷ்பங்கள் எல்லாவற்றையும் எடுத்து விட்டால்தான் புது மலர்கள் சிவனது பாதத்தில் சேரும். இனிமேல் எங்களை இவ்வாறு தடை செய்யாதீர்" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
இதைக் கேட்டதும் அர்ஜுனனுக்கு ஆச்சரியம். ஓடிப்போய் அவனை மீண்டும் நிறுத்தி, "ஆமாம் அர்ஜுனன்தானே சிறப்பாக பூஜை செய்பவன்? பீமன் இல்லையே?" என்று கேட்க, அந்த வேலைக்காரருக்கு கடுப்பாகிவிட்டது. உடனே, "உமக்கு தெரியுமோ, பீமன்தான் இந்த பூஜையை செய்தவன். அந்த அர்ஜுனன் என்பவன் பூஜை செய்வதெல்லாம் வெறும் வெளி வேஷம்தான்" என்று மறுமொழி கூறிவிட்டு செல்கையில், அங்கு வேறொருவன் ஒரு சிறு கூடையில் கொஞ்சம் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு வருவதை அர்ஜுனன் பார்த்தான்.
உடனே கண்ணன் சும்மா இருப்பாரா? கண்ணன் அவனை நோக்கி, "இது யார் பூஜை செய்தது?" எனக் கேட்க, அவன், "இது யாரோ அர்ஜுனன் எனும் வேஷக்காரனால் செய்யப்பட்ட பூஜை மலர்கள்" என்றான். அப்பொழுதுதான்தான் கர்வத்துடன் செய்யும் வெளி வேஷ பூஜையை விட, பீமன் பக்தியுடன் செய்யும் இந்த பூஜையே மேலானது என்று அர்ஜுனனுக்கு தோன்றியது. உடனே அவனது கர்வமும் அடங்கிப் போனது.
‘பகவானை மனதார வழிபடாமல், எவ்வளவு ஆடம்பரத்துடன் பூஜை செய்தபோதிலும் பயனில்லை’ என்று பாரதம் உணர்த்துகிறது. இதைத்தான் இந்த கதையும் நமக்குச் சொல்கிறது.