பால் பொருட்களில் பாலுக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் அதிகம் உபயோகப்படுத்தியது தயிர் மற்றும் மோர் ஆகும். அதிலும் குறிப்பாக, மோரின் உபயோகம் மிக அதிகம். தாகம் என்று வருபவர்களுக்குக் கூட கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தயாரித்த மோரை வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். அப்பேர்ப்பட்ட மோரில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
பட்டர் மில்க்கில் தண்ணீர் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் உள்ளன. அவை உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்து, டி-ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு கோளாறு உண்டாவதைத் தடுக்கின்றன. பட்டர் மில்க்கில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களும், லாக்டிக் அமிலமும் சீரான செரிமானத்துக்கு உதவி புரிந்து மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறச் செய்கின்றன; குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் மலச் சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகின்றன. எரிச்சலுடன் கூடிய குடல் இயக்க அறிகுறியை (Irritable Bowel Syndrome) நீக்குகின்றன.
மோரில் உள்ள அதிகளவு ரிபோஃபிளவின் என்ற சத்து உடலுக்கு உடனடி சக்தி தரவும், அமினோ அமிலத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் செய்கிறது. இதிலுள்ள கால்சியம் சத்து உடலின் எலும்புகளையும் பற்களையும் வலுவடையச் செய்கிறது. இதிலுள்ள லாக்டிக் அமிலம் வயிற்றினுள் உற்பத்தியாகும் அமிலத்தை சமநிலைப்படுத்தி, உணவு செரிக்க இதமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து அருந்த அசிடிட்டி அறிகுறி இருந்தால் நீங்கும்.
மோரில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. மோரிலிருக்கும் புரோபயோட்டிக்ஸ் ஜீரணம் சிறப்பாக நடைபெறவும் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவி புரிகின்றன. சருமத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தின் நிற மாற்றத்தைத் தடுக்கவும், மருக்களை நீக்கவும் உதவுகின்றன. சருமத்துக்கடியில் தங்கியிருக்கும் ஈரப்பசையை தக்க வைக்கவும் செய்கின்றன.
பட்டர் மில்க்கில் நிறைந்திருக்கும் ஊட்டச் சத்துக்களும், குறைந்த கலோரி அளவும் உடலை நீரேற்றத்துடனும் சக்தி நிறைந்ததாகவும் வைக்க உதவுகின்றன; எடைப் பராமரிப்பிற்கும் உதவி புரிகின்றன. பெண்களுக்கு மெனோபாஸுக்கு முந்திய நிலையில், அவ்வப்போது சருமத்தில் ஏற்படும் வெப்ப ஒளிக் கீற்றுகளின் தாக்கத்திலிருந்து விடுபடவும் மோர் உதவுகிறது. கோடைக் காலத்தில் அடிக்கடி மோர் அருந்துவதால் உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியடையும்.
மோரில் உள்ள அதிகளவு ரிபோஃபிளவின், உண்ணும் உணவுகளை சக்தியாக மாற்றி உடலின் பல்வேறு இயக்கங்கள் சரிவர நடைபெற உதவுகிறது. மேலும், கல்லீரல் சிறப்பாக செயல்படவும், ஹார்மோன் சுரப்பிகள் சரிவர இயங்கவும், நச்சுக்கள் வெளியேறவும் உதவி புரிகிறது.
இவ்வாறு பல விதங்களில் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பட்டர் மில்க்கை தினமும் பல முறை அருந்தி நற்பலன் அடைவோம்.