மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அர்ஜுனனுக்கு சாரதியாக அவனுடைய தேரை ஓட்டி சேவை புரிந்தார் ஸ்ரீகிருஷ்ணர். ஒவ்வொரு நாள் போருக்குப் பிறகும் தமது இருப்பிடத்திற்கு அவர்கள் திரும்புவார்கள். வந்தவுடன் அர்ஜுனன் நேராக குடிலுக்குள் போய்விடுவான்.
ஆனால், கிருஷ்ணர் அப்படிப் போக மாட்டார். தேரில் இருந்து குதிரைகளை அவிழ்த்து விடுவார். பிறகு தேரை அதனுடைய இருப்பிடத்துக்குத் தள்ளி சென்று நிறுத்துவார். பின்னர் குதிரைகளிடம் வந்து அன்புடன் அவற்றுக்கு வருடி கொடுப்பார். அதன் பின்னர் அவற்றைக் குளிப்பாட்டி விட்டு, தீனி எடுத்து வைப்பார். குதிரைகள் ஆவலுடன் அவற்றை உண்பதை பாசத்துடன் கவனிப்பார். அவற்றிற்கு பசி ஆறிவிட்டதை அறிந்து தண்ணீர் எடுத்து வைப்பார். அவை குடித்து முடித்த பிறகு நிம்மதியாக பெருமூச்சு விட்ட பிறகே தனது இருப்பிடத்திற்கு வந்து தனது உடலை சுத்தப்படுத்திக் கொள்வார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த தினசரி அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன், ஒரு நாள் அவரிடம், “நீ ஏன் கிருஷ்ணா இவ்வளவு சிரமப்படுகிறாய்? இந்த வேலைகளைச் செய்யத்தான் நம்மிடம் நிறைய வேலை ஆட்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் செய்யச் சொல்லக்கூடாதா?” என்று கேட்டான்.
அதைக்கேட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தார். “அர்ஜுனா, இப்போது நான் ஒரு தேரோட்டி. இந்த வேலைகளை எல்லாம் ஒரு தேரோட்டிதான் செய்ய வேண்டும். நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். இவ்வாறு அவரவர் வேலைகளை அவரவரே செய்வதுதான் கர்ம யோகம். நான் அதைத்தான் செய்தேன்” என்றார்.
பகவானே ஆனாலும் தான் எந்தக் கடமையை ஏற்றிருக்கிறோமோ அதை முழுமையாக நிறைவேற்றுவதுதான் சரி என்பதை அர்ஜுனன் அப்போது புரிந்து கொண்டான். ஏற்றுக்கொண்ட கடமையை செவ்வனே செய்வதே சிறப்பு.