புராணக் கதை: பிறவிப் பற்றின் காரணமாக விளையும் மறுபிறவி!

Purana Kathai: Piravi Patrin Kaaranamaaga Vilaiyum Marupiravi
Purana Kathai: Piravi Patrin Kaaranamaaga Vilaiyum Marupiravihttps://aanmeegavisayangal.blogspot.com
Published on

ருவர் வாழும்போதும் சரி, இறக்கும் தருவாயிலும் சரி அவரவர் எண்ணங்களில் உள்ள நல்லதும் கெட்டதும் அவரையே சாரும். நாம் நினைக்கும் எண்ணமே நமது அடுத்த பிறவிக்கும் வழி வகுக்கிறது என்பதை இந்த புராணக் கதையின் மூலம் அறியலாம்.

ஒரு காலத்தில் பூமியில் திருமாலின் அம்சமாக ரிஷபர் என்றொரு சிறந்த அரசர் வாழ்ந்தார். அவருக்குப் பல பிள்ளைகள் இருந்தாலும், பரதர் எனும் மூத்த மகனே வெகு சிறப்பானவராக வளர்ந்தார். இந்த பரதனே ராஜ்ஜியத்தையும் சிறப்பாக ஆண்டு வந்ததால், இந்த தேசத்திற்கு, ‘பரத கண்டம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.

நீண்ட காலம் சிறப்பான ராஜ்ய பரிபாலனம் செய்த அவருக்குக் தகுந்த வயது வந்ததும், அனைத்து சுகங்களையும் துறந்து வனம் சென்று தவம் செய்யலானார். இறைவனைக் குறித்து ஒரே சிந்தனையுடன் அவர் தவம் செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் ஒரு மான் குட்டி அனாதையாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு அதன் மேல் கருணை கூர்ந்து அதை தண்ணீரிலிருந்து காப்பாற்றி எடுத்து தமது ஆசிரமத்துக்குக் கொண்டு வந்தார். ராஜ்ஜியம், மனைவி, மக்கள் அனைத்தையும் துறந்து இறைவனை குறித்து தியானம் செய்ய வந்த பரதனுக்கு அந்த மானின் மேல் ஏனோ பற்று உண்டாக, அதை கவனித்து உணவு தந்து மிகவும் சிறப்பாக வளர்த்தார். இறை மீதான பற்றை விட்டு, உயிர் மீதான பற்றை வளர விட்டு விட்டார் பரதர்.

வளர்ந்து கால் முளைத்த மான், தனது சுபாவப்படி காட்டில் சென்று விளையாடத் தொடங்கியது. ஒரு நாள் அது காணாமலும் போயிற்று. ஆம், அதற்கு சொந்தமான வனத்திற்கு அது சென்று விட்டது. அந்த மானின் மீது இருந்த அன்பால் அன்று முதல் பரதனுக்கு மானைக் காணவில்லையே என்ற ஏக்கம் பிடித்து விட்டது. அந்த ஏக்கம் மறையாமலேயே தவம் செய்தார். அவர் இறக்கும்பொழுதும் மானின் நினைவு அவரை விட்டு அகலவில்லை. அதனால் அவர் அடுத்த பிறவியில் ஒரு மானாகவே பிறந்தார்.

அப்படிப் பிறந்ததால் முன் பிறவியில் அறவழியில் வாழ்ந்து இருந்ததால், பழைய நினைவுகள் அவருக்கு வந்தது. மானின் மேல் பற்றை வளரவிட்டமையால்தான் தமக்கு இந்த கதி வந்தது என்பதை உணர்ந்தார். மானாகப் பிறந்த பரதர், மற்ற மான்களுடன் சேர்ந்து, மேலும் தனது பற்று நிலையை வளர விடாமல் ஒதுங்கி தனிமையிலிருந்து தான் முற்பிறவியில் தவம் செய்து கொண்டிருந்த காட்டிற்கே போய் இறைவனிடம் பக்தி செய்யத் தொடங்கினார். இப்படி நல்லதையே எண்ணியபடி மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானுக்கு முடிவு காலம் வர, அது அடுத்த பிறவியில் அந்தணனுக்கு கடைசி மகனாக பிறந்து எளிதில் மோட்சம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
ராவணனை சிறைபிடித்த மன்னன் பற்றித் தெரியுமா?
Purana Kathai: Piravi Patrin Kaaranamaaga Vilaiyum Marupiravi

அவர் ஒரு மானின் மேல் அன்பு கொண்டதனால் அந்தப் பற்று அவரை மறுபிறவிக்கு இட்டுச் சென்றது. ஆனால், மறுபிறவியில் அவரின் நல்வினை பயன்களால் தான் என்னவாக இருந்தோம், ஏன் இந்த நிலைக்கு ஆளானோம் எனும் சிந்தனை எழுந்ததால் அதற்கேற்ற பரிகாரம் செய்து அவர் ஒரு அந்தணனுக்கு மகனாகப் பிறவியெடுத்து மோட்சமும் அடைந்தார்.

ஒருவரின் இறுதி நேரத்தில் அவருடைய மனதில் தோன்றும் கடைசியான எண்ணமே, அவரது அடுத்த பிறவி இன்னதென்பதை முடிவு செய்யும். அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் முற்பிறவியில் செய்த வினைக்கு பயன்படாமல் போகவே போகாது என்கிறது பாகவதம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com