புராணக் கதை: யாருக்கு பக்தி அதிகம்?

Purana kathai: Who has more devotion?
Purana kathai: Who has more devotion?https://www.computerized-tomography.com
Published on

ர்ஜுனன் ஒருசமயம் ஸ்ரீகிருஷ்ணரிடம், “தூக்கத்தில் கூட  நான் கிருஷ்ணா, ராமா என்றுதான் உலறுகிறேன். எனக்கு உன் மீது அந்த அளவிற்கு பக்தி அதிகம்” என்று கூறினார். ‘இவ்வுலகில் எல்லோரையும் விட தனக்கு மட்டுமே ஸ்ரீகிருஷ்ணன் மீது அதிக பக்தி உள்ளது’ என்ற ஆணவம் அர்ஜுனனுக்கு இருந்தது. இந்த ஆணவத்தைப் போக்கவும், இதே எண்ணமுடைய நாரதர், பிரகலாதன் மற்றும் திரௌபதி ஆகியோருக்கும் பாடம் புகட்ட எண்ணினார் ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜுனனை தேரில் அழைத்துக் கொண்டு காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்படிச் செல்லும்பொழுது வழியில் முனிவர் ஒருவர் கத்தியை தீட்டிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த அர்ஜுனன், ‘கமண்டலம் இருக்க வேண்டிய கையில் கத்தியை ஏன் தீட்டிக் கொண்டுள்ளார்’ என்று யோசித்து பின், ‘உனக்கு ஏதாவது இதுபற்றித் தெரியுமா?’ என்று அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். ஸ்ரீகிருஷ்ணரோ, ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்.

தேரை நிறுத்தி முனிவரிடமே என்னவென்று விசாரிக்கலாம் என்று அர்ஜுனன் முடிவு செய்தான். முனிவரிடம் சென்ற அவன், "சுவாமி, நீங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கம் என்ன?" என்று கேட்டான். முனிவர் அவனிடம், “மேலோகத்தில் நாரதன் என்று ஒருவன் உள்ளான். அவன் இஷ்டத்திற்கு வைகுண்டத்திற்குச் சென்று, ‘நாராயணா நாராயணா’ என்று கத்தி என்னுடைய திருமாலின் தூக்கத்தைக் கெடுக்கின்றான். அவனுக்கு இந்தக் கத்திதான் பதில் சொல்லப் போகிறது. அதேபோல், பிரகலாதன் என்ற ஒரு சிறுவன், ‘எல்லா இடத்திலும் கடவுள் உள்ளார்’ என்று சொல்லி ஒரு தூணிற்குள் நிற்க வைத்து திருமாலின் அவதாரமான நரசிம்மரை மூச்சு விடாதபடி செய்தான், அவனுக்கும் இந்தக் கத்திதான் பதில் சொல்லப்போகிறது. அதுமட்டுமில்லாமல், திரௌபதி என்று பெண் ஒருத்தி உள்ளாள். அவளுடைய சேலையை துச்சாதனன் பிடித்து இழுக்கும்பொழுது அவள் என்ன செய்தாள்? ஒன்றுக்கு ஐந்து கணவன் இருந்தும் அவர்களைக் கூப்பிடாமல் கண்ணனை அல்லவா அழைத்தாள்? அவரும் கை வலிக்க அவளுக்கு சேலையை அளித்தார். அவளுக்கும் இந்தக் கத்தி பதில் சொல்லப் போகிறது. இவர்கள் எல்லோரையும் விட, அர்ஜுனன் என்று ஒருவன் உள்ளான். நான் அவனைப் பார்த்ததே கிடையாது. அவனுக்குத் தேரோட்டியாக என்னுடைய கண்ணன் இருந்தார். அந்த அர்ஜுனனுக்கும் இந்தக் கத்தி பதில் சொல்ல போகிறது” என்று தனது பற்களைக் கடித்தார் முனிவர்.

இதனைக் கேட்ட அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனிடம் சென்றான். ஸ்ரீகிருஷ்ணர் அவனிடம், ‘நீ ஒருவன் மட்டும்தான் என் மீது பக்தி கொண்டு உள்ளவன் என்று நினைத்தாய். ஆனால், உன்னை விட ஆயிரம் மடங்கு என் மேல் பக்தி உள்ளவர்களும் இந்த உலகில் உள்ளார்கள் என்பதை நீ புரிந்து கொண்டாயா?’ என்று அவனிடம் சொல்லாமல் சொல்லி பாடம் புகட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com