
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் அனைத்து பறந்தோடும் என்பது ஐதீகம். அந்த வகையில் நாளை அதாவது, அக்டோபர் 4-ம்தேதி புரட்டாசி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த சனிப்பிரதோஷமாகும். அன்றைய தினம் எதை செய்யலாம்? எந்த 4 விஷயங்களை செய்யக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை என்றாலே சிறப்புதான். அதேபோல் சனிப்பிரதோஷம் என்றாலும் தனி சிறப்பு தான். இவை இரண்டும் ஒன்று சேர வருவது மிகவும் அரிது. அதனால் இந்த நாளை தவறவிட்டு வீடாதீர்கள்.
சனிப்பிரதோஷத்தில் கலந்து கொண்டால் ஒரு ஆண்டு பிரதோஷத்தில் கலந்து கொண்ட பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று நீங்கள் சிவபெருமானை வழிபட்ட பிறகு, பெருமாளையும், சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் தரிசிப்பது நல்ல பலன்களை தரும்.
நாளை சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து விரதத்தை தொடங்க வேண்டும். பின்னர் பூஜையறையில் இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானுக்கு உகந்த மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
நாளைய தினம் அவரவர் வசதிக்கு ஏற்ப, நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்கலாம். வயதானவர்கள், நோய் பாதித்தவர்கள் பால், பழங்களை சாப்பிட்டு விரதத்தை தொடரலாம். நாளை மௌன விரதம் இருந்து சிவபெருமானை மனதார வழிபாடு செய்வது உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும்.
செய்ய வேண்டியவை:
தெரிந்தும், தெரியாமலும் செய்த மன்னிப்பே இல்லாத பாவங்களுக்கு கூட நாளை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிப்பிரதோஷத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும், பெருமாளையும் வழிபடுவதால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முதல் விஷயமாக நந்தி மற்றும் சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க தவறக்கூடாது. நந்தியையும் இந்நாளில் வழிபட நீங்கள் தவறக்கூடாது. நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தருமாறு மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நாளை தினம் முழுவதும் ‘ஓம் நமசிவாய’ என்னும் இந்த மந்திரத்தை அமைதியாக, முழு மனதுடன் உச்சரித்து வந்தால் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும். குறைந்தபட்சம் 108 முறை சொல்லுவதும், எழுதுவதும் மிகவும் சிறப்பானதாகும்.
சனிப்பிரதோஷத்தில் ஈசனையும், சனி பகவானையும் வழிபடுபவர்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும் உண்டாகும். மேலும் நாளை சனிக்கிழமை என்பதால் சனிபகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடாமல் இருக்கக்கூடாது. அதேபோல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாளையும் வழிபட மறக்கக்கூடாது.
நாளைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.
நாளை தினம் உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்ய வேண்டும். 3 பேருக்காவது கண்டிப்பாக உணவு தானம் செய்ய வேண்டும்.
இந்த 4 விஷயங்களை மறந்தும் செய்து விடக்கூடாது:
நாளை பிரதோஷ வேளையில் கோவில் பிரகாரத்தை சுற்றக்கூடாது.
மாமிச உணவு, மதுபானம் உட்கொள்வது, கோபம், பொய் பேசுவது, பிறரை துன்புறுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது.
விரதத்தின் போது வெள்ளை உப்பு, பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
புரட்டாசி பிரதோஷம் மற்றும் சனிப்பிரதோஷம், ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும், வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் போக்கி நிம்மதியைத் அருளக் கூடியதாகும். புத்தி தெளிவு, மனோபலம், மங்கல காரியங்கள் நடத்தல், தோஷங்கள் நீங்குதல், இந்திரனுக்கு சமமான புகழும் செல்வமும் கிடைத்தல் போன்ற பலன்கள் அருளும் என்பது நம்பிக்கை. கர்மவினை பாவங்கள், கொடூரமான துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட இந்த புரட்டாசி மாதம் வரக்கூடிய சனிப்பிரதோஷத்தை (நாளை) தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.