
பிரதோஷத்தன்று விரதம் இருந்து தூய்மையான மனதுடன் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மகா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தினமும் மாலை 4 முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலம் என்றே குறிப்பிடப்படுகிறது. இதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். திரியோதசி துவங்கியதில் இருந்து உபவாசம் இருந்து, சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். அன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்த பிறகே உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
ஒரு சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்தால் ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று தரிசித்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து தூய்மையான மனதுடன் சிவ தரிசனம் செய்வது, மந்திர ஜெபம் செய்வது ஆகியவறால் பல மடங்கு புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும். சனிப் பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவபெருமானையும், சனீஸ்வரனையும் வழிபட்டால் அனைத்து விதமான பாவங்கள், கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
நாளை (சனிக்கிழமை) மகா சனிப்பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு பூசி, தூய மனதுடன் சிவ நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். பகல் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நாள் (நாளை) முழுவதும் உபவாசமாக இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவரையும், சிவபெருமானையும் உள்ளம் உருகி ஐந்தெழுத்து (சிவாய நம) மந்திரத்தை ஓதி வழிபட்டு, அதற்கு பிறகு அங்கு தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
நாளை சனிப்பிரதோஷத்திற்கு அபிஷேகம் செய்ய இளநீர், பசும் பால், தயிர் வாங்கிக் கொடுத்தால் கேட்ட வரங்கள் கிடைக்கும். இந்த 3 பொருட்களையும் வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம். இந்த பொருட்களால் நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது அவரின் உடல் எப்படி குளிருமோ அதே போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் நீங்கி, செழிப்படையும் என்பது ஐதீகமாகும்.
சிவனுக்கு தாமரை பூ படைத்து வழிபட்டால் வேண்டிய வரங்களை அள்ளி அள்ளி கொடுப்பார். அதுவும் சனிப் பிரதோஷமான நாளைய தினம் சிவபெருமானுக்கு தாமரை மலர் சாற்றி உங்கள் கோரிக்கையை வையுங்கள். நிச்சயம் நிறைவேறும்.
ஆலயம் செல்ல முடியாதோர் வீட்டிலிருந்து சிவபெருமானுக்கு எளிய முறையில் பூஜை செய்து தயிர் சாதம், பழவகைகளை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்த பின்னர் நைவேத்தியத்தை பிறருக்கு கொடுத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.