புரியில் ஜெகந்நாதர் கோவில் மட்டும் அதிசயம் அல்ல. இங்குள்ள லோகநாதன் சிவன் கோவிலிலும் ஒரு அதிசய நிகழ்வு நடக்கிறது. வருடத்தில் 364 நாட்கள் நீரில் மூழ்கிய படி இருக்கும் இக்கோவில் சிவலிங்கம், வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருகிறது. புரியில் உள்ள 5 சிவன் கோவில்களில் லோகநாதன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் கருவறையில் உள்ள சுயம்புலிங்கம் நீரிலேயே மூழ்கி இருக்கும்.
சிவராத்திரியின் மூன்று நாட்களுக்கு முன் இங்குள்ள அர்ச்சகர்கள் கருவறை நீரை வெளியேற்ற, அப்போது சிவலிங்கம் காட்சி தருகிறது. லோகநாதரின் உத்சவ மூர்த்தி ஜெகன்னாதர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. இவர் ஜெகன்னாதர் கோவிலுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
பெருமாள் நகைகள் மற்றும் பொக்கிஷங்களுக்கு இவரே காவலாக இருக்கிறார். இக்கோவில் பற்றிய புராணக் கதையும் உண்டு. இராமர் சீதையை தேடி இங்கு வந்த போது சிவனை தரிசிக்க விரும்பினார். அப்போது கிராமவாசி ஒருவர் ராமருக்கு ஒரு சுரைக்காய் கொடுக்க அதை லிங்க வடிவில் வைத்து பிரதிஷ்டை செய்து இராமர் பூஜித்தார். இதுவே லோகநாதன் கோவில் ஆனது. புரி சோமவார மேளாவின்போது இந்த உத்சவ மூர்த்தியும் ஊரை வலம் வருவார்.
ஜெகன்னாதர் கோவிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது லோக நாதர் கோவில். பங்கோத்த ஏகாதசியன்று மட்டுமே சிவலிங்கம் தரிசனம் தருகிறது. மேலும் மற்ற நாட்களில் கருவறை நீரில் பால், தேன், இளநீர், வில்வம், தேன் என்று நிவேதனம் செய்யப்படுவதால் இவற்றின் கருவறை நீர் பல நோய்களுக்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது.
இக்கோவில் மணல் கற்களால் ஆனது. பிரதான கோவில் தரையிலிருந்து 30அடி உயரத்தில் உள்ளது. உள்ளே கிழக்குச் சுவரில் கார்த்திகேயனும், நான்கு கைகள் உள்ள விநாயகர் உருவமும் உள்ளனர். சிவராத்திரிக்கு முன்பாக அனேக அளவில் இந்த சிவலிங்கத்தை காண வருகிறார்கள்.