கவர்ச்சிகரமான உறுப்பு உடலில் எது என்றால் அது கண்தான். கண்கள் காணும் காட்சிகளே உணர்வுகளின் அடிப்படையாக அமைகிறது என்பதால் கண்களின் மதிப்பு மற்ற அனைத்தையும் விட அதிகம்தான். ஆனால் அன்று 90 வயது ஆனாலும் கண்ணாடி இன்றி வலம் வந்தார்கள். இன்றோ அலைபேசி , கணினி முன்னேற்றத்தால் 5 வயதில் கூட கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சற்றே கவலை தரும் விஷயம்தான்.
ஆரோக்கியம் காக்கும் விஷயங்களில் கண்கள் முக்கிய இடம் பெறுகின்றன என்பதால் இங்கு கண்கள் பாதுகாப்பு பயிற்சிகள் சிலவற்றை காண்போம்.
அதற்கு முன் கண் செயல்பாடு குறித்து பார்ப்போம்
ஒளியானது கார்னியா மற்றும் கண்மணி வழியாக கண்ணுக்குள் நுழைந்து விழித்திரையில் ஒளியை மையப்படுத்த உதவும் லென்ஸ் வடிவத்தை மாற்றுகிறது. பின் விழித்திரை ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. அந்த சமிக்ஞைகள் பார்வை நரம்புக்கு அனுப்பப்பட்டு மூளைக்கு அனுப்புகின்றன.
மூளையானது அவற்றை காட்சித் தகவலாக நமக்குத் தருகிறது. விழித்திரையில் உள்ள சிறப்பு செல்கள் மூலம் கண் வண்ணங்களை உணர்கிறது. ஒளியையும் இருளையும் கண்டறிகிறது.
ஆழத்தையும் தூரத்தையும் உணர கண் தொலைநோக்கிப் பார்வையைப் பயன்படுத்துகிறது. சுற்றி உள்ள இயக்கத்தைக் கண்டறிந்து பொருட்களைக் கண்காணிக்கிறது. இப்படி நமது கண்ணின் நுணுக்கமான செயல்பாடுக்கேற்ப அதற்கு பயிற்சிகள் மற்றும் ஓய்வு தந்து கண்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
என்னென்ன பயிற்சிகள் செய்யலாம்? இதோ எளிமையான 5 வழிகள்..
வெப்பத்தை உருவாக்கும் உள்ளங்கையில் மறைத்தல் (Palming)
உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்து பின்னர் அவற்றை உங்கள் மூடிய கண்களின் மீது வைத்து எடுக்கவும். இதனால் இதமான வெப்பம் கண்களுக்கு புத்துயிர் தரும்.
கண் சுழற்சி( Eye rotation)
கண்களின் சீரான இயக்கத்தை மேம்படுத்த மேலே, கீழே, இடது மற்றும் வலதுபுறம் பார்க்கவும், பின்னர் உங்கள் கண்களையும் வட்டமான இயக்கத்தில் சுழற்றவும்.
கவனம் செலுத்துதல் (Focusing)
உங்களுக்கு அருகிலுள்ள ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துங்கள், பின்னர் உங்கள் பார்வையை தொலைவில் உள்ள பொருளின் மீது நகர்த்தவும். இது நமது பார்வைக் கூர்மைக்கு உதவும்.
சிமிட்டுதல் ( Blinking)
கண்ணீரை கட்டுப்படுத்தவும், கண் அழுத்தத்தைக் குறைக்கவும் அவ்வப்போது சில வினாடிகள் வேகமாக சிமிட்டவும்.
கண் மசாஜ்( Eye Massage)
தசைகளை தளர்த்த உங்கள் விரல் நுனியால் கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனால் ஏற்படும் நன்மைகள்
கண் பயிற்சிகள் கண் அழுத்தத்தையும் சோர்வையும் குறைக்க உதவும். கவனம் மற்றும் நுணுக்கமான பார்வையை மேம்படுத்தும். தவறாமல் செய்யும் கண் பயிற்சிகள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஒரு நாளைக்கு 2-3 முறை கண் பயிற்சிகளை தவறாமல் செய்வது நன்மை தரும். குறிப்பாக டிஜிட்டல் சாதனங்களில் பணிபுரியும் போது அதிக கவனம் தேவைப்படும். பணிகளைச் செய்யும்போது இடைவேளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் கணினியின் அதிக வேலை பளு காரணமாக கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களையும் இந்தப் பயிற்சிகள் மூலம் தடுக்கலாம் என்பது கூடுதல் தகவல்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம். தொடர்ச்சியான கண் பிரச்னைகள் அல்லது பார்வை பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)