புட்லூர் அம்மன் கோவில்: குழந்தை வரம் அருளும் நிறைமாத கர்ப்பிணி அம்மனின் அதிசயம்!

புட்லூர் பூங்காவனத்தம்மன் ஆலயத்தின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் சீமந்த பிரசாத அற்புதங்கள் பற்றிய முழு விவரங்கள்!
புட்லூர் அம்மன் - Putlur Angala Parameswari
புட்லூர் அம்மன் - Putlur Angala Parameswari
Updated on

திருவள்ளூர் மாவட்ட புட்லூர் ராமாபுரத்தில் உள்ள 1000 ஆண்டு பழமையான பூங்காவனத்தம்மன் கோவில், இயற்கை மண்புற்று வடிவில் கர்ப்பிணிப் பெண் போல மல்லாந்து கிடக்கும் அங்காள பரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு. சீமந்த வழிபாடு, வளையல் சாத்துதல், எலுமிச்சை திருஷ்டி நீக்கம் போன்ற வழிபாடுகளால் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பெருமளவில் தரிசனம் செய்கின்றனர். இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீகத்தலமாகும். இந்தக் கோவிலில் மூலவர் சிலை வடிவில் இல்லாமல், இயற்கையான புற்று வடிவில் காட்சியளிப்பது அற்புதமாகும்.

மூலவர்: தாண்டவராயன், அங்காள பரமேஸ்வரி

உற்சவர்: பூங்காவனத்தம்மன் தலவிருட்சம்: வேப்பமரம்

1000 ஆண்டுகள் பழமையான கோவில்

அம்மனின் தோற்றம்:

பொதுவாக அம்மனை நாம் நின்ற திருக்கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோதான் தரிசிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்திலோ புற்று வடிவில் எழுந்தருளி இருக்கும் பூங்காவனத்தம்மன், ஓரு கர்ப்பிணிப்பெண்போல மல்லாந்து காலை நீட்டி படுத்த நிலையில், வயிறு நிறைமாத கர்ப்பிணிபோல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள்.

இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறது. இந்த புற்று மண் அம்மனுக்கு அப்பால் அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி காட்சி தருகிறாள்.

அம்மன் கர்ப்பிணிப் பெண்ணாக ஓய்வெடுக்கும் தோற்றத்தில் இருப்பதால், அவருக்குப் பின்னால் சிவன், தாண்டவராயன் எனும் பெயரில் காட்சி தருகிறார். எனவே அம்மன் சன்னதிக்கு முன்பாக வழக்கமான சிம்ம வாகனத்திற்கு பதிலாக இங்கு நந்தி அமைந்துள்ளது.

வழிபாட்டு முறைகள்:

புட்லூர் அம்மன் கோவிலில் செய்யப்படும் சீமந்த வழிபாட்டு முறைகள்:

அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடைபெறுவதற்கு முன்பு அம்மனுக்கு "சீமந்த வழிபாடு" நடத்துகின்றனர். 5, 7, 9 மாதங்களில் இந்த சீமந்த வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல் சார்த்தி, பூச்சூட்டி சடை முடித்து 7 விதமான கலந்த சாதங்கள் செய்து அம்மனுக்குப் படையல் இடுகின்றனர்.

இங்குள்ள அம்மனுக்கு வளையல்கள் சாத்துவது வழக்கம். குங்குமத்துடன் பிரசாதமாக எலுமிச்சம் பழங்கள் வழங்கப்படுகின்றன.

பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் பொழுது 5 எலுமிச்சம் பழங்களை கையில் சுற்றி திருஷ்டி கழித்து, காலால் நசுக்கி விட்டு உள்ளே செல்வது வழக்கமாக உள்ளது.

குழந்தை பாக்கியம் அருளும் புட்லூர் அம்மன் வழிபாட்டு பலன்கள்:

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து, குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சீமந்தம், வளைகாப்பு போன்றவை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

புட்லூர் அம்மன் - Putlur Angala Parameswari
புட்லூர் அம்மன் - Putlur Angala ParameswariAI Image

இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மனை தரிசிப்பதற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

வரலாறு மற்றும் ஐதீகம்:

பார்வதி தேவியும் சிவபெருமானும் மேல்மலையனூருக்கு பூங்காவனம் (தற்போது புட்லூர்) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப்படைந்ததால் வேப்பமர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்க, உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியைத் தாண்டிச்சென்று புனித நீர் எடுத்து வந்தார்.

அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமானால் நதியைக் கடந்து வர இயலவில்லை.

எனவே வெள்ளம் குறையட்டும் என்று காத்திருந்தார். இதற்கிடையே பசி தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட அவரைச் சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்துவிட்டது.

இந்த நிலையில அங்கு திரும்பி வந்த ஈசன், புற்றுக்குள் பார்வதி அமர்ந்துவிட்டதை அறிந்து அங்கேயே நின்றுவிட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான் தாண்டவராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதைக் காணலாம்.

பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு மரம் காணப்படுகிறது. அதன் கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்றும் உள்ளது. இந்த புற்றைச் சுற்றி வரும்போது பெண்கள் தங்கள் புடவையின் முந்தானையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து வேப்பமரக் கிளையில் கட்டி வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக முடிச்சிடுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி வரும் பெண் பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

மயான கொள்ளை:

இக்கோவிலில் ஒவ்வொரு மாசி சிவராத்திரி அன்று உற்சவமும், மறுநாள் அமாவாசை தினத்தன்று மயானக்கொள்ளை சூரை வைபவமும் நடைபெறுவது வழக்கம்.

கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த வைபவம் காப்பு கட்டுதல், விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் இடுதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் அம்மன் திருவீதி உலா வருவதும் நடைபெறும்.

கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
புட்லூர் அம்மன் - Putlur Angala Parameswari

எங்கு உள்ளது?

சென்னை அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்தில் திருவள்ளூருக்கு அருகில் உள்ள புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 850 மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருளைப் பெற வேண்டிய சரியான வழிபாட்டு முறைகள், சீமந்த சடங்குகளின் ஆன்மீகப் பலன்கள் மற்றும் குழந்தை பாக்கியம் பெற மேற்கொள்ள வேண்டிய பிரார்த்தனை நடவடிக்கை களைத் தெளிவாக அறிந்து கொண்டு பலன் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com