

அம்மன் கோவில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வருவது வழக்கம். ஆனால், எரியும் தீயில் குளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது ஆச்சரியம்தானே! சங்கரன் கோவிலில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள வடக்கு மாவலியூத்து கிராமத்தில் உள்ள அக்னி மாலையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3 வது செவ்வாய் அன்று நடைபெறும் திருவிழாவில் 11 அடி நீளம், 5 அடி அகலத்தில் அமைக்கப்படும் குழியில் விறகுகளை எரிய விடுகின்றனர்.
சுமார் 6 அடி உயரத்திற்கு மேல் ஜூவாலையுடன் எரியும் தீயில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்குகின்றனர்.100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த அக்கினிமாலை அம்மனுக்கு, சைவ உணவே படையலாக படைக்கப்படுகிறது. எதிரிகள் தொல்லை, செய்வினை, மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் தங்களின் குறைகள் நீங்க இங்கு வந்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீ பாலியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வாரம் தீமிதி விழா நடைபெறும். இவர் ரேணுகாதேவியின் ஒரு வடிவம் என்பது ஐதீகம். இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இந்த அம்மன் கோயில்கள் தீ மிதி திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். தீ மிதி விழா முடிந்ததும் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும்.
இது பாலியம்மன் நிகழ்த்தும் அதிசயமாக கருதப்படுகிறது. அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீக்குளி இறங்கி முடிந்ததும். குண்டத்தில் மிஞ்சும் கரித் துண்டுகளை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச்செல்வர் காரணம் இந்த கரித்துண்டுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்தால்,தீய சக்திகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆடி மாதம் மற்றும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் கன்னிப்பெண்களின் திருமணத் தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள அரசமகள் தேவி கோவில் மிகப்பிரசித்தி பெற்ற பழமையான ஆலயம் ஆகும். இத்தல அம்மன் கன்னியாகவே அருள்பாலிக்கிறார். மகரிஷி வம்சாவளி மன்னர் ஒருவருக்கு மகளாக அவதரித்து. மக்கள் துன்பத்தை போக்க அரச வாழ்வை துறந்து இத்தல அரசமரத்தின் கீழ் கன்னியாகவே வாழ்ந்து மறைந்தாள் என்பது வரலாறு.
இவள் காலையில் சாந்த வடிவிலும், பகலில் உக்கிரமான துர்க்கையாகவும், மாலையில் சிவ சக்தியாகவும் அருள்பாலிக்கிறார். இந்த தேவி தன் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும், குடும்ப ஒற்றுமையையும், சிறந்த வாழ்க்கையையும் அருளும் சக்தியாக விளங்குகிறாள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள மகிபாலன்பட்டி ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோயில், இப்பகுதியைச் சேர்ந்த 24-அரை கிராம மக்களின் புகழ்பெற்ற குலதெய்வக் கோயிலாகும். இங்கு அம்மன் மான் உருவில் துர்க்கை வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கு வருடந்தோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா (குறிப்பாக சித்ரா பௌர்ணமி) மிகவும் பிரசித்தி பெற்றது. திருமணத் தடை நீங்குதல், குழந்தைப்பேறு வேண்டுதல், குடும்பத்தில் ஏற்படும் தடைகள் அகலுதல் போன்ற பல பிரார்த்தனைகளுக்கு அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். இக்கோயிலின் வலப்புறம் பழமையான பாளைமரம் ஒன்று உள்ளது.
இம்மரத்தின் முன் யாரும் பொய் சொல்வது இல்லை என்றும் அப்படி மீறி கூறுபவர்கள் பூங்குன்ற நாயகியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று நம்புகின்றனர். அதனால் பல இடங்களில் இருந்து இங்கு வந்து சத்தியம் செய்கிறார்கள்.
திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில், அருணாச்சலேஸ்வரர் மலையின் வடகிழக்கு திசையில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. பார்வதி தேவி தவம் செய்த தலங்களில் ஒன்றான இக்கோவிலில், மூலவராக பச்சையம்மன் தபசு நிலையில் கையில் தாமரையுடன் காட்சி தருகிறார். இங்கே பக்தர்கள் பெரும்பாலும் பச்சை நிற ஆடைகளையே அம்மனுக்கு காணிக்கையாக தருகின்றனர்.
அம்மனுக்குப் பச்சை நிற குங்குமம் படைப்பது மிகவும் பிரசித்தம். இந்த அம்மனின் திருமுடி மீது அலரி மற்றும் நந்தியாவட்டை வைத்து பூசாரி அர்ச்சனை செய்யும் போது முடி மீது வைத்துள்ள பூ வலது பக்கத்தில் விழுந்தால் பக்தர்களுக்கு நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
தனுஷ்கோடி செல்லும் வழியில், ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இங்கு வழங்கப்படும் மஞ்சள் பிரசாதம் தீராத நோய்களைக் குணமாக்குவதாக பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர். கோயிலைச் சுற்றி பல்வேறு நோய்களை தீர்க்கும் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் உள்ளன என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ராமநாதபுரத்தில் இருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. எமனேஸ்வரம். இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் சொர்ணகுஜாம்பிகை.திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில், புகழ்பெற்ற மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள மிக முக்கியமான சிவன் கோயிலாகும். நவகன்னியர்கள் (புனித நதிகள்) தங்கள் பாவங்களைப் போக்க வேண்டி வழிபட்ட பெருமைமிக்கது இத்தலம், இங்கு நவநதி கன்னியர் சன்னதி தனியாக உள்ளது.
இதன் சிறப்பம்சம் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்கள் இங்கு 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து வந்து நவகன்னியரை வணங்கினால் வயது நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், உங்களின் நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகள், தீராத நோய்கள் மற்றும் திருமணத் தடைகளுக்கு எந்தெந்த சக்திவாய்ந்த அம்மன் தலங்களுக்குச் சென்று, என்னென்ன எளிய பரிகாரங்களைச் செய்யவேண்டும் என்கிற தெளிவான வழிகாட்டலை நீங்கள் முழுமையாகப் பெற்று, வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் நிம்மதியையும் அடைய முடியும்.