

2026 ஜனவரி மாதம் 29-ம்தேதி நாளை (வியாழக்கிழமை) தைமாத ஏகாதசி வருகிறது. அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ ஏகாதசி என்று பெயர். ‘புத்ரதா’ என்றால் ‘புத்திர பாக்கியம்’ அளிப்பது என்று பொருள். இந்த நாள் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இந்த விரதத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கடைபிடித்தால் குடும்பத்தில் சந்தான தோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் உண்டாகும். குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் விரதம் இருந்தால் குழந்தைகளின் வாழ்வு வளமாகும்.
எத்தனை செல்வம் இருந்தாலும் செல்வங்களில் உயரிய மக்கட் செல்வம் இல்லை என்றால் மற்ற செல்வங்கள் அனைத்தும் வீண் என்கின்றன சாஸ்திரங்கள்.
அந்த மக்கட் செல்வம் வேண்டுவோர் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் குறித்தும் சாஸ்திரங்கள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி.
தம்பதியருக்கு சந்ததிப் பிரச்னைகள் இருந்தாலோ அல்லது அவர்களுக்கு குழந்தை இல்லை என்றாலோ, மனைவி மற்றும் கணவர் இருவரும் ஒன்றாக விரதம் இருந்து விஷ்ணுவை ஒன்றாக வழிபட வேண்டும். பத்ராவதி நாட்டு அரசர் சுகேதுமான் புத்ரதா ஏகாதசி விரதத்தை கடைபிடித்து புத்திரப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏகாதசி திதி 28-ம்தேதி புதன் கிழமை மதியம் 4.38 மணிக்கு தொடங்கி 29-ம்தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.56 மணி வரை உள்ளது.
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, பெருமாள் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலேயே மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
வீட்டில் உள்ள விஷ்ணு படத்திற்கு புதிய அகல் விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு, அதில் ஒரு துளசி இலையை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பின் தீபத்திற்கு எதிராக அமர்ந்து கண்களை மூடி மனதிற்குள் ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷமி நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் விஷ்ணுவையும், லட்சுமியையும் ஒரு சேர அழைக்கும் சக்தி வாய்ந்தது.
மந்திரம் முடிந்ததும் உங்கள் கைகளை கூப்பி மகாவிஷ்ணுவே என் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி ராஜயோகங்களையும் செல்வ செழிப்பையும் மன அமைதியையும் எனக்கு அருள வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். விளக்கு அணைந்த பிறகு அந்த துளசி இலையை எடுத்து உங்கள் பணப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த துளசி இலை உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் ஒரு தாயத்து போல் செயல்படும்.
ஏகாதசி நாளில் உடல் வலு உள்ளவர்கள் உணவைத் தவிர்க்க வேண்டும். கடுமையான விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் மட்டுமே பால் மற்றும் பழங்களை உட்கொள்ளலாம். இயலாதவர்கள் குறைந்தபட்சம் முழு அரிசிச் சோற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். முதல் நாளே பறித்து வைத்த துளசியால் தயாரிக்கப்பட்ட துளசித் தீர்த்தத்தை அருந்தலாம். விரதத்தில் வெங்காயம், பூண்டு, அரிசி மற்றும் பருப்பு வகைகள் சாப்பிட கூடாது. நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ உச்சரிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை பாரணை முடித்து பின்பு உணவு உட்கொண்டு விரதம் முடிக்கலாம்.
இந்த ஏகாதசியில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபடுவதால், தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், பெற்ற குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். மேலும் தீராத கடன் பிரச்சனைகள் நீங்கும், செல்வ செழிப்பு உண்டாகும் மற்றும் மன அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆன்மிக ரீதியாகவும், தாந்திரீக ரீதியாகவும் ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் கல் உப்பு வாங்குவது மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் விரதம் இருப்பது, விஷ்ணுவின் நாமங்களை உச்சரிப்பது, புராணங்களைப் படிப்பது, மற்றும் தானங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
அதேபோல், ஏகாதசி தினங்களில் துளசி மாலை அணிந்து ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ அல்லது ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திரம் ஜபிப்பது மிகுந்த பலனை தரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.