
இந்து புராணங்களின்படி ராதிகா ராணி யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ராவலில் பிறந்தார். ராதை என்ற செல்லப் பெயருடன் வலம் வந்த ராதிகா ராணி ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பிற்கு முழுமையாகப் பாத்திரமானவள்! ஆன்மிகக் கதைகளில் ராதா கிருஷ்ணாவின் காதல் எப்போதும் உயர்ந்ததாக இருக்கிறது. தூய்மையான அன்பு மற்றும் உண்மையாக காதல் ஆகியவற்றின் உருவகமாக ராதா கிருஷ்ணா இருக்கின்றனர்.
கிருஷ்ணருக்கு பல மனைவியர் இருந்தாலும், அவர் திருமணம் செய்துக் கொள்ளாத ராதையே அவரிடம் அதிக உரிமை பெற்றுள்ளார். மற்ற பெண்களுக்குக் கிடைக்காத பாக்கியம் அவளுக்கு மட்டும் உண்டு. காரணம், கிருஷ்ணர் ராதையின் பெயரால் ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். மற்றவர்களுக்கு இல்லாத சிறப்பு இது. ராதை மஹாலட்சுமியின் மறுவடிவம். கிருஷ்ண அவதாரத்தில் அவரின் மனைவிகள் அனைவரும் லட்சுமி தேவியின் அவதாரம் என்றாலும் கூட, ராதா லட்சுமியை வழிபடுவது கிருஷ்ணரின் அருளை அதிகம் பெற உதவும். கிருஷ்ணரின் விருப்பத்தின் காரணமாக மகாலட்சுமி பூமியில் வந்து ராதிகா ராணியாகப் பிறந்தார்.
மன்னர் விருக்ஷபானு ராவல் கிராமத்தில், யமுனையில் குளிக்கும்போது அழகிய உருவத்துடன் கூடிய ஒரு குழந்தை தாமரை மலர் மீது இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் பர்சானாவில் உள்ள தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று தனது மகளாகவே வளர்த்தார்.
கிருஷ்ணர் வசித்த பிருந்தாவனத்தில் குறிப்பிட்ட தொலைவில் பர்சானா இருந்தது. ராதை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் அவளது கண்கள் திறக்கப்படாமல் இருந்தது. ராதையின் பெற்றோர் ஒரு சமயம் கோகுலத்தில் உள்ள கிருஷ்ணர் வீட்டுக்கு வந்தபோது, குழந்தை கிருஷ்ணருக்கு அருகில் குழந்தை ராதையை இட, கிருஷ்ணரின் பாதம் ராதையின் மேல் பட, அவளது கண்கள் திறந்தது. பூமியில் பிறந்த ராதை, கிருஷ்ணரைத்தான் முதலில் காண வேண்டுமென கண்களை மூடி வைத்திருந்ததாகவும் கூறுவர்.
சிறு வயதில் இருந்தே கண்ணனும் ராதையும் ஒருவர் மீது ஒருவர் காதலுடன் வளர்ந்து வந்தனர். அவர்களின் காதல் மிகவும் புனிதமானதும் சுயநலமில்லாத அன்புடன் இருந்தது. சந்தர்ப்ப வசத்தால் இருவரும் திருமண வாழ்வில் இணைய முடியாமல் போனது. ஆயினும், கிருஷ்ணரின் வழிபாட்டில் எப்போதும் ராதை உடன் இருக்கிறார். ராதை என்ற பெயரில் கிருஷ்ணர் உருகி விடுவார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு ராதா அஷ்டமி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (31.08.2025) ராதா அஷ்டமி தினமாகும். ராதாஷ்டமி தினத்தன்று, அவரை பூஜித்து விரதம் இருப்பதால் மகாலட்சுமியின் ஆசியைப் பெறலாம். ராதையின் வழிபாட்டில் ஶ்ரீ கிருஷ்ணரின் மனம் குளிரும், ராதையை மட்டும் வணங்கினால் கூட கிருஷ்ணர் தேடி வந்து ஆசியை வழங்குவார். அந்தளவிற்கு கிருஷ்ணர் ராதாவின் மேல் காதலாக இருக்கிறார். அதுபோல தாய் ராதையின் மனதை குளிர்விக்க கிருஷ்ணருக்கு பிடித்தமான செயல்களையும் அவருக்குப் பிடித்த உணவுப் பண்டங்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
பால், பாலில் செய்த இனிப்புகள், பாதம் பால், ரசகுல்லா, ஜாமூன், பால்கோவா, தயிர், வெண்ணெய் போன்றவற்றை கிருஷ்ணர் மிகவும் விரும்புவார். கிருஷ்ணரின் விருப்பம்தான் ராதையின் விருப்பம்! ராதையை நினைத்து, ‘ராதே! ராதே!’ என்று கூறி வணங்குங்கள். ராதாவை வழிபடும் இடத்திற்கு கண்ணன் தேடி வருவான். இனிமையான திருமண வாழ்க்கை ராதாவை வழிபட்டால் கிடைக்கும். மகாலட்சுமி தாயாரின் வடிவமாக இருப்பதால் ராதா செல்வத்தின் அதிபதியாக உள்ளார். இதனால் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு செல்வ செழிப்பையும் வழங்குவார். ராதா கிருஷ்ணாவை வழிபட்டு நல்லாசி பெறுங்கள். ராதே! ராதே!