
பொதுவாக, ஹோமங்கள் செய்யப்படுவதன் நோக்கம் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், வறுமை ஒழிந்து செல்வம் சேரவும், நீண்ட கால திருமணத் தடைகளை அகற்றவும், வாழ்வில் அமைதியும் நேர்மறை ஆற்றலைப் பெறவும் செய்யப்படுவதோடு, முக்கியமாக தெய்வங்களின் அருளைப் பெற வேண்டி பல்வேறு ஹோமங்கள் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்படும் சில வகை ஹோமங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கணபதி ஹோமம்: கணபதி ஹோமம் செய்வதால் தடைகள் நீங்கி, பணக் கஷ்டம் தீரும், தன சேர்க்கை உண்டாகும் மற்றும் தேவையற்ற குடும்பப் பிரச்னைகள் வராமல், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
2. சண்டி ஹோமம்: அம்பிகையை முக்கியமான கடவுளாகக் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் பயம் போகும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரங்கள் நீங்கும்.
3. நவகிரஹ ஹோமம்: ஒருவர் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்கி, அவற்றின் சுழற்சியால் ஏற்படும் கெடுபலன்களைத் தவிர்த்து, நல்ல பலன்களைப் பெறுவதற்காக நவகிரக ஹோமம் செய்யப்படுகிறது.
4. சுதர்ஸன ஹோமம்: பகவான் மகாவிஷ்ணுவின் ஆயுதங்களின் ஒன்றான சுதர்ஸனத்தை வேண்டுதலாக வைத்து செய்யப்படும் இந்த ஹோமத்தினால் ஏவல், பில்லி, சூனியங்கள் நீங்கும், மேற்கொள்ளும் சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம்: சிவபெருமானின் அம்சமான ருத்ரரை குறித்து செய்யப்படும் இந்த ஹோமத்தினால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம்: இந்த ஹோமத்தைனை செய்வதால் மாந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர காமேஷ்டி ஹோமம்: இந்த ஹோமம் புத்திர பாக்கியத்தை பெற்றுத் தரும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம்: கன்னிப் பெண்களின் திருமணத் தடையை நீக்கி, விரைவில் அவர்களின் திருமணத்தை நடத்தித் தரும் இந்த ஹோமம்.
9. ஸ்ரீ கந்தர்வ ராஜ ஹோமம்: திருமணமாகாத ஆண்களுக்குத் திருமணத் தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற உதவும் இந்த ஹோமம்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம்: இந்த ஹோமத்தை செய்வதனால் செல்வ வளம் பெருகும், குடும்பப் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.
11. தில ஹோமம்: இந்த ஹோமத்தினை செய்வதனால் சனி தோஷம் நீங்கும், குடும்பத்தில் இறந்தவர்களின் சாபங்களை போக்கும்.
12. ஸ்ரீ பிரத்யங்கிரா ஹோமம்: காளி தேவியைக் குறித்து செய்யப்படும் இந்த ஹோமம் நோய்களை நீக்கும், எதிரிகளின் தொல்லைகளைப் போக்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்: இந்த ஹோமம் எதிரிகளின் சூழ்ச்சிகள், தொல்லைகளை நீக்கி, வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தரும்.
14. கண் திருஷ்டி ஹோமம்: திருஷ்டி தோஷங்களை விலக்கும் இந்த ஹோமம் காரிய தடைகளையும் நீக்கும்.
15. காலசர்ப்ப ஹோமம்: இந்த ஹோமம் திருமணத் தடை, உத்தியோக தடைகளை நீக்குவதோடு, வாழ்வில் சோதனைகளைப் போக்கி சாதனைகளைப் பெற்றுத் தரும்.