
துர்க்கை என்ற சொல்லுக்குத் துன்பங்களைத் தூளாக்குபவள் என்று பொருள்.
அசுரர்கள், தங்களுக்கு எண்ணிலடங்காத துன்பங்களைக் கொடுத்த காலத்தில், தேவர்கள் ஆதிபராசக்தியிடம் அடிபணிந்தனர். அசுரரை அழிக்க அம்பிகை சர்வ தெய்வங்களின் சக்தியையும், தன் சக்தியையும் ஒன்றாக இணைத்து, மகாசக்தியாக துர்க்கையை உருவாக்கினாள். இந்த துர்க்கை அசுரர்களை வென்று, அமரர்களையும் அகிலத்தவரையும் காத்தாள். பிறகு ஒரு வனத்தில் உறைந்து உலக நலனுக்காக உன்னதத் தவம் புரியத் தொடங்கினாள்.
அப்போது அம்மையப்பரின் அரிதான மணவிழாவைக் காண அகத்தியர் வேதாரண்யத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு வனத்தில் அவரை விந்தியன் என்ற அசுரன் தடுத்தான். வானுக்கும் பூமிக்குமாய் வளர்ந்து, அகத்தியருக்கு வழிவிட மறுத்தான். அகத்தியர் சிந்தனை வயப்பட்டபோது தவக்கோலத்தில் தனித்திருந்த துர்க்கையைக் கண்டார். அசுரனை அழிக்கத் தனக்கு சக்தி அருள அந்த துர்க்கையைத் துதித்தார். அன்னை அவருக்கு அளப்பரிய ஆற்றலை அளித்தாள். அகத்தியரும் அசுரன் விந்தியனை அழித்தார். அதன் பின் கயிலைநாதனின் கல்யாண வைபவத்தைக் காணச் சென்றார்.
துர்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அகத்தியர், அவளை, ‘வாழ்வித்த அன்னை வனதுர்க்கா’ என்று போற்றினார். அன்று முதல் அன்னை, வனதுர்க்கா என்றே அறியப்படுகிறாள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனையும் ஆட்கொண்டிருக்கிறாள் அன்னை. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் வாழ்ந்துவந்த அவருக்கு, வனதுர்க்கையின் மேல் அவ்வளவு அன்பு. அவளை வழிபடாமல் எந்தச் செயலையும், ஏன் எழுத்தாணியைக்கூட பற்றியதில்லை!
ஒரு மாரிக்காலம். அடர் மழை விடாது பொழிந்தது. கடுங்காற்றும், மழையும் கம்பர் வீட்டுக் கூரையைப் பிய்த்தெறிந்தன. கவிச்சக்கரவர்த்தி கலங்கவில்லை. ‘‘அம்மா! உன் அருள் மழை என்னைக் காக்கும்”, என்று அன்னையை வணங்கிவிட்டு உறங்கிப் போனார்.
மறுநாள் கம்பர் கண்விழித்தபோது, பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. புயல், தென்றலாய் மாறியிருந்தது. அடர்மழை அடங்கி, பன்னீர்ச் சாரலாய் தூவிக்கொண்டிருந்தது. நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டிருந்தது! திகைத்து சிலிர்த்த கம்பர், வனதுர்க்கையை, ‘கதிர் வேய்ந்த மங்கல நாயகி’ என்று பாடிப் பரவசப்பட்டார். ‘கதிர் வேய்ந்த மங்கலநாயகி’யே நாளடைவில் கதிராமங்கலம் என மருவியது.
கதிராமங்கலம், கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் 24-வது கிலோ மீட்டரில் உள்ளது.
ஆரம்பத்தில் வனத்தின் நடுவே வெட்ட வெளியில் அன்னை காட்சி அளித்திருக்கிறாள். கதிர்வேய்ந்த நாயகி வெயிலிலும், மழையிலும் நிற்பது கண்டு உள்ளம் பதைத்த சிலர் அவளுக்கொரு கீற்றுக் கொட்டகை அமைத்தனர். அதுவே அன்னைக்கான முதல் ஆலயம்.
இன்றைக்கோ ஏற்றமிகு கருவறை, எழிலார்ந்த சந்நிதி வாயில், பளிங்கு முன் மண்டபம், கலையம்சம் மிக்க ராஜகோபுரம் என்று கம்பீரமாக நிற்கிறது.
முன் மண்டபத்தில் அன்னைக்கு எதிரில், அவள் ஆரோகணிக்கும் சிங்கம், சிற்பமாய் காட்சி அளிக்கிறது.
ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை. இதை உணர்த்தும் விதமாக, முன்புறம் ஒயிலாகவும், பின்புறம் பாம்பு படம் எடுத்தது போன்றும் தோற்றம் கொண்டிருக்கிறாள் அன்னை.
பொதுவாக துர்க்கை சிம்ம வாஹினியாகவோ, காலடியில் வதைபட்ட மகிஷனை மிதித்தபடி மகிஷாசுரமர்த்தினியாகவோ அருள்வாள். ஆனால், இந்த வனதுர்க்காதேவியோ அருள்பொழியும் மகாலட்சுமி ரூபம் கொண்டு தாமரைப் பூவில் எழுந்தருளி உள்ளாள்.
ராகு வழிபடும் துர்க்கை என்பதால் இவள் ராகுகால துர்க்கை! நெற்றிக் கண் கொண்டு துலங்குவதால், சிவதுர்க்கையும்கூட!
வனதுர்க்கை மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிதேவதை. எனவே அந்த நாளன்று அன்னையை அர்ச்சித்துப் பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் அகலும்.
ராஜராஜசோழன் காணிக்கையாகக் கொடுத்த வாள் அன்னைக்கு அருகில் இன்றைக்கும் காணப்படுகிறது.
ராகுகாலம் என்பது ஸ்ரீதுர்க்காதேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். தான் வழிபடும் தேவியை தன் பிடியில் உள்ளவர்களும் வழிபடும்போது, ராகு மனம் மகிழ்ந்து அருள்புரிகிறார். எனவேதான், ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜிப்பது மிகவும் ஏற்றது என்று சொல்லப்படுகிறது.
ராகு தசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட கன்னியர் இந்த துர்க்கையை முறைப்படி வழிபட்டால், அந்த தோஷம் நீங்கி நலமடைவார்கள். மணமாகாத கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும்.