

ஸ்ரீ ராம பிரான் அவதரித்த தினத்தை ராம நவமியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறோம். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் தினங்கள் மட்டுமே மிகப் பெரிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். ஜென்மாஷ்டமியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுவதை போல ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
ஸ்ரீராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன் தியேதா யுகத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் நிகழ்ந்தது சைத்ர மாதம் எனப்படும் பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஒன்பதாவது திதியான நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில் என புராணங்கள் சொல்கின்றன.
மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், முதல் மனித அவதாரமாகவும் கருதப்படுவது ஸ்ரீராம அவதாரமாகும். அதாவது, மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.
ஸ்ரீராம பிரான் அவதரித்த தினத்தையே ஸ்ரீராம நவமியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, விஷ்ணு ராமராக அவதரித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டு ராமநவமி வரும் 26-ம்தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. வரும் 26-ம்தேதி நவமி திதி பகல் 2.57 மணிக்கு தொடங்கி 27-ம்தேதி பகல் 12.53 மணிக்கு நிறைவடைகிறது. 27-ம்தேதி ராமநவமி வழிபாடு செய்ய காலை 6.30 முதல் 7.43 வரை சிறந்த நேரமாகும்.
அதே போல் ராமர் அவதரித்ததாக சொல்லப்படும் புனர்பூசம் நட்சத்திரமும் மார்ச் 27ம் தேதியன்று தான் அமைந்துள்ளது. அதனால் மார்ச் 27ம் தேதியையே ஸ்ரீராம நவமி நாளாக கருதி, வழிபட வேண்டும் என பண்டிதர்கள் கூறுகின்றனர்.
ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, தூய ஆடையை அணிந்து வீட்டில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம் ஆகியவற்றை செய்து படைக்கலாம். எதுவும் முடியாதவர்கள் எளிமையாக இரண்டு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர் வைத்து ராமருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
அப்படி படைக்கும் போது "ராம்...ராம்" என ராம மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பது சிறந்தது. அதேபோல் அன்றைய தினம் ராமாயணம் படிப்பது அல்லது ராமரின் பெருமைகள், அவரின் நாமங்களை கேட்கலாம்.
அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று மறக்காமல் துளசி மற்றும் தாமரை ஆகியவற்றை வாங்கிசென்று ராமருக்கு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். கோவில் வாசலில் நின்று, அங்கு வருபவர்களுக்கு நீர் மோர் தானமாக கொடுத்து, அவர்களின் தாகத்தை தணிக்கலாம்.
குறிப்பாக ராம நவமி அன்று ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார்.
அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.
கொஞ்சம் வசதி படைத்தவர்கள் குடை, செருப்பு, விசிறி போன்றவற்றையும் வாங்கி தானமாக கொடுக்கலாம். ஸ்ரீராம நவமி நாளில் தானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராம நவமி அன்று பூஜை செய்யும் போதும் சரி, தானம் கொடுக்கும் போதும் சரி ராம நாமம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ராம்...ராம் என சொல்லிக்கொண்டே உங்களின் கோரிக்கைகள் எதுவும் அதை ராமரிடம் முன் வைக்கலாம்.
ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.
ஸ்ரீராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். ராம நவமி விரதத்தை, அன்றைய தினம் சூரிய உதயம் துவங்கி, மறுநாள் சூரிய உதயம் வரை சிலர் கடைபிடிப்பார்கள். சிலர் சூரிய உதயம் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை கடைபிடிப்பார்கள். இன்னும் சிலர் நவமி திதி துவங்கி, முடியும் வரை கடைபிடிப்பார்கள். இதில் எந்த நேரம் உங்களுக்கு வசதியானதோ அந்த முறையில் நீங்கள் விரத்தை கடைபிடித்து ஸ்ரீராமரின் அருளை பெறலாம்.