
பொதுவாக எல்லா கோவில்களிலும் நுழைந்தவுடன், இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். இந்த 'ஸ்ரீ வழிவிடு முருகன்' கோவில் கர்ப்பகிரகத்தில் ஆனைமுகனும் ஆறுமுகனும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக விசேஷமானதும் அரிதானதுமான ஒன்று.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, ஒரு 500 ஆண்டுகள் பழைமையான, ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் தான் இந்த அதிசயத்தைக் காண முடியும். அண்ணன் தம்பி இருவருமே ஒன்றாக மூலவராக காட்சியருளுகிறார்கள்.
சொத்துக்காக சண்டையிட்டு கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்கு வந்து வழிபட்டால் சமாதானமாகப் போகவும் இருவரும் வாழவும் வழி பிறக்கிறபடியால் இவர் 'ஸ்ரீ வழிவிடு முருகன்' என்று அழைக்கப்படுகிறார். ராமநாதபுரம் நீதிமன்றம் இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள் தங்கள் வழக்குகளில் வெற்றி பெற இந்தக் கோவிலில் பிரார்த்தனை செய்வது வழக்கம். அவர்களுக்கு வெற்றி கிடைத்ததாலும் 'ஸ்ரீ வழிவிடு முருகன்' கோவில் இங்கே பிரசித்தி பெற்றிருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு தற்போதைய கோவில் இருக்கும் இடத்தில் போதி மரம் என்று சொல்லப்படும் பிப்பல் மரம் இருந்ததாம்.
இந்த மரத்தின் அடியில் முருகப்பெருமானின் ஒரு சிறிய வேல் ஆயுதம் நடப்பட்டு நீண்ட காலமாக வழிபடப்பட்டதாம்.
இக்கோவிலின் தல விருட்சம் 'சாயா' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ சனீஸ்வரரின் தாயார் பெயர் சாயா தேவி. அன்னையின் சொல்படி இங்கே வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனி பகவான் அருள் புரிவதாக ஐதீகம். இதே தல விருட்சம் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் உள்ளது.
நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், இடும்பன் ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே மற்றொரு விசேஷம் பக்தர்கள் கூட்டம் எவ்வளவு வந்தாலும் எந்த வித சிரமமும் இன்று முருகனை தரிசித்து மனமார வணங்கி வழிபட எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மூலவரை சுற்றி வரும்போது கோவில் பிரகாரங்களில் திருப்புகழ், கந்த புராணப் பாடல்கள், சஷ்டி கவசம், சண்முக கவசம் என பல பாடல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பள்ளியறை வழிபாட்டுக்காக ஒரு மண்டபம் அமைக்கப்பெற்று ஒவ்வொரு நாள் இரவிலும் ஊஞ்சல் வழிபாடும் நடைபெற்று வருகிறது.
இந்தக் கோவிலில் கொண்டாடப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகை பங்குனி உத்திரமாகும். இந்த வருடம் இந்தக் கோவிலின் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2ஆம் தேதி, காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் 4 கி.மீ தொலைவிலுள்ள நொச்சி வயல் ஊரணிக்கரையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து நடை பயணமாக, பால் குடம் ஏந்தி, காவடி எடுத்து 'அரோகரா' ஒலி விண்ணைப் பிளக்க கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு 'ஸ்ரீ வழிவிடு முருகனால்' வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வழிவிடப்பட்டார்கள்.