
வாலி வதைப் படலம் இராமாயணத்தில் இராமன் கிட்கிந்தையின் மன்னனான வாலியைக் கொன்ற நிகழ்வினை விளக்கும் பகுதியாகும்.
இராமன், இலக்குவன், சுக்ரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைகிறார்கள். அங்கு, போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலியின் மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூறுகிறான். சுக்ரீவன் அதை ஏற்றுக்கொள்கிறான். வாலியை வலியப் போருக்கு அழைக்கிறான் சுக்ரீவன். வாலியும் போருக்குப் புறப்படத் தயாராகிறான். ஆனால் வாலியின் மனைவி தாரை, சுக்ரீவன் இராமன் துணையோடு போரிட வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறாள்.
போருக்குச் செல்லும் வாலியைத் தடுக்கிறாள்.
வாலி, இராமனது அறப்பண்புகளை தாரைக்கு உணர்த்தி பேசுகிறான். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது. போரின் ஒரு கட்டத்தில் சுக்ரீவன் இராமனை அடைந்து உதவி வேண்டினான். வாலியும், சுக்ரீவனும் ஒரே தோற்றம் கொண்டவர்கள், எனவே, இராமன் வாலியிடமிருந்து சுக்ரீவனை வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஏதுவாக அவனை கொடிப்பூ அணிந்து, போர் புரியச் சொன்னார்.
அவ்வாறே சென்று வாலியோடு போரிட்டான் சுக்ரீவன். அவனை மேலே தூக்கிக் எறிந்துகொல்ல முயன்றபோது, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்தினான். வாலி மண்ணில் சாய்ந்தான்.
தன்மீது அன்பு செலுத்தியவன் யார் என அறிய, வாலி அம்பைப் பறிக்க, அதனால் குருதி வெள்ளம் பெருக, அதைக் கண்டு உடன் பிறந்த பாசத்தால் சுக்ரீவன் கண்களில் நீர்மல்க நிலமிசை மூர்ச்சையடைந்து வீழ்ந்தான்.
வாலி தன் மார்பில் தைத்த அம்பில் 'இராமன்' என்னும் நாமத்தைக் கண்டான். இராமன் அறமற்ற செயலைச் செய்துவிட்டதாக இராமனை பலவாறு இகழ்ந்தான். இராமன் தான் செய்தது முறையான செயலே எனத் தெளிவுபடுத்தினான்.
தகாத வகையில் மறைந்து நின்று எய்யக் காரணம் யாது என வாலி வினவினான். அதற்கு இலக்குவன் விடையளித்தான். இராமனைச் சுக்ரீவன் முதலில் சரணடைந்து விட்டதால், அவனைக் காக்க வேண்டி இராமன் இவ்வாறு செய்ய நேரிட்டது என்று உரைத்தான். வாலி மனம் மாறி இராமனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டி, அவன் பெருமை கூறித் துதித்தான்.
இப்போது வாலி, ஸ்ரீராமர் சாதாரண மனிதர் அல்ல, அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பதை உணர்கிறார். ராவணனிடமிருந்து ஸ்ரீராமருக்கு மாதா சீதையை மீட்டுத் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சுக்ரீவரிடம் கேட்கிறார். ஸ்ரீராமரின் கைகளால் தான் இறப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், தேவர்கள் அடைய முடியாத ஒரு மரணத்தை அடைவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ராமருக்கு சேவை செய்யுமாறு தனது மகன் அங்கதத்திற்கு அறிவுறுத்துகிறார். சுக்ரீவன் கள் குடித்துவிட்டு ”உன்னிடம் குறும்புகள் செய்யலாம், அப்போதெல்லாம் அவனை தண்டிக்காதே, மன்னித்து விட்டு விடு” என்று தன்னுடைய சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கூறியபடியே மண்ணில் சாய்கிறார் வாலி.