ராமாயணம் - தசரத புத்திரர்களின் மனைவிகளும் கடவுளரின் அவதாரங்களே!

தசரத புத்திரர்களின் மனைவிகள்
தசரத புத்திரர்களின் மனைவிகள்
Published on

ராமாயணம் மனிதர்களின் வாழ்க்கைக்கு நீதியையும் தர்மத்தையும் போதிக்கும் ஒரு ஒப்பற்ற காவியமாகும். இந்த காவியம், படிப்பவர்களுக்கு ஒரு உத்வேகம் தருகிறது. ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் வாழ்க்கையில் தர்மத்தினை கடைபிடிக்க வழி செய்கிறது.

ராமாயணத்தின் கதை நாயகனான ஶ்ரீராமர், மஹா விஷ்ணுவின் 7வது அவதாரமாக உள்ளார். இதே ராமாயணத்தில் மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பரசுராமனும் உள்ளார். ஆயினும் ராமாயணத்தில் பரசுராமருக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அவர் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டிலும் பங்கேற்ற பெருமைக்குரியவர்.

ராமாயணத்தில் ஶ்ரீராமர் கதாபாத்திரம் மட்டுமல்ல, பல கதாபாத்திரங்களும் மற்ற அவதாரங்களுடன் தொடர்புடையவை. ராமாயண காவியத்தில் பல ஆண்கள் அவதாரம் எடுத்திருந்தனர். லக்ஷ்மணன் மகாவிஷ்ணு பள்ளி கொள்ளும் அனந்தனின் அவதாரமாக இருந்தார். யாராலும் வெல்ல இயலாத சக்தி கொண்ட வாயுபுத்திரன் ஹனுமான் சிவபெருமானின் அவதாரமாக இருந்தார்.

அதுபோல சில பெண்களும் கடவுளின் அவதாரமாக இருந்தனர். அந்த பெண்களின் அவதாரத்தை பற்றி பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
இந்த அறிகுறிகள் இருந்தால் கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்!
தசரத புத்திரர்களின் மனைவிகள்

சீதை:

ராமாயணத்தில் சீதை, பூமாதேவியின் அவதாரமாக இருந்தார். நேபாள மஹாராஜா ஜனகர் ஒரு முறை விவசாயம் செய்ய தன்னுடைய ஏரை கொண்டு பூமியில் உழுதார். அப்போது அந்த நிலத்தில் கிடைத்த பெண்தான் சீதை. சீதையை ஜனகர் வளர்த்ததால் ஜானகி என்ற பெயர் வந்தது. மேலும் வைதேகி, மைதிலி உள்ளிட்ட பல பெயர்களும் அவருக்கு உண்டு. சீதை, மஹாலக்ஷ்மியின் ஒரு அவதாரம் ஆவார். மஹாலக்ஷ்மியின் ஒரு வடிவம் தான் பூமாதேவி. சீதை லஷ்மியின் அவதாரம் ஆதலால், விஷ்ணு அவதாரமான ராமரை மணந்தாள்.

ஊர்மிளை:

ஊர்மிளை நாகலஷ்மியின் அவதாரம் என்பதால் , விஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அனந்தனின் அவதாரமாக இருந்த லக்ஷ்மணனை மணந்து கொண்டாள். ஊர்மிளாவும் பதிவிரதையில் மிகவும் சிறந்த பெண்தான். ராமர் வனவாசம் சென்ற போது சீதையும் கூடவே வந்தாள். அவர்களுடன் லக்ஷ்மணன் வனவாசம் செல்ல புறப்பட்ட போது தன்னையும் அழைத்து செல்லுமாறு ஊர்மிளா வற்புறுத்தினாள். ஊர்மிளா தன்னுடன் வந்தால், தன் ராமசேவையில் பாதிப்பு வரும் என்பதால் லக்ஷ்மணன் ஊர்மிளையை வனவாசம் வரக்கூடாது என்று தடுத்தான்.

தனது கணவரின் விருப்பத்தை ஏற்று, அவரை பிரிந்து 14 வருடங்கள் அரண்மனையில் ஊர்மிளா இருந்தாள். அந்த 14 வருடமும் இரவும் பகலும் தூங்கிக் கொண்டிருந்தாள்.

மாண்டவி:

ராமரின் சகோதரனும் தசரதனுக்கு பின் ராமரின் பாதுகையின் பேரில் ஆட்சி செய்த பரதனின் மனைவிதான் மாண்டவி. பரதன் விஷ்ணுவின் கைகளில் உள்ள அவரது ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அவதாரம் ஆவார். அதுபோலவே பரதனின் மனைவியான மாண்டவி, லட்சுமிதேவி கையில் ஏந்தியிருக்கும் சங்கின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். ராமர் வனவாசம் சென்ற பின் அரசனாக இருந்தாலும் பரதன் துறவி போல வாழ்க்கை நடத்தத் தொடங்குகிறான். அந்த வேளையில் மாண்டவியும் அவனது நெறிகளை பின்பற்றினாள்.

இதையும் படியுங்கள்:
பெருமாளுக்கு உகந்த 30 ஸ்லோகங்கள் - எப்போது சொல்ல வேண்டும்? என்ன பலன்?
தசரத புத்திரர்களின் மனைவிகள்

ஷ்ருதகீர்த்தி:

ராமனின் இளைய சகோதரன் சத்ருகனின் மனைவிதான் ஷ்ருதகீர்த்தி. சத்ருகன் மகாவிஷ்ணுவின் சங்கின் அவதாரமாக கருதப்படுகிறார். அது போல அவரது மனைவியான ஷ்ருதகீர்த்தி, மஹாலக்ஷ்மியின் சக்கரத்தின் அவதாரமாக பிறந்தாள். லஷ்மணன், ராமன் மீது வைத்திருந்த அன்பிற்கு சிறிதும் குறைவில்லாதது ஷ்ருதகீர்த்தி தன் சகோதரி சீதையின் மீதுள்ள அன்பு. சீதை தன் அவதாரத்தை முடித்து பூமா தேவிக்குள் அடைக்கலம் ஆகும் வேளையில், ஷ்ருதகீர்த்தியும் தன்னை உடனே மாய்த்து கொண்டாள் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com