‘கல் அடிப்பட்டாலும் கண் அடிப்படக் கூடாது’ என்று முன்னோர்கள் கூறுவர். நமக்குக் கண் திருஷ்டி இருந்தால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். நமக்குக் கண் திருஷ்டி இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கண் திருஷ்டி இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் மனம் லயிக்காது. அடிக்கடி கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் உடல் அசதியாக இருப்பது போன்று உணர்வார்கள்.
2. அதிக கண் திருஷ்டி இருப்பவர்கள் புதிதாக ஆடை அணியும்போது அது எங்காவது பட்டு கிழிந்துப்போகும் அல்லது அந்தப் புது ஆடையில் கருப்புக் கறை ஏற்படும்.
3. கண் திருஷ்டி அதிகமாக இருப்பவர்கள் வீட்டில் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரச்னைகள் வந்துகொண்டேயிருக்கும். பொருட்கள் தொலைந்து போதல், காரியத்தடை, சோகம், பிரிவு, நஷ்டம் போன்றவை ஏற்படும்.
4. கணவன், மனைவியிடையே காரணம் இல்லாமல் சண்டை, கருத்து வேறுபாடு, சுப காரியம் தடைப்படுதல், உறவினர்களுடன் பகை போன்ற பிரச்னைகள் தானாகவே ஏற்பட்டால் அந்த வீட்டில் கண் திருஷ்டி அதிகமாக இருப்பதாகப் பொருள்.
5. வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவராக மருத்துவ செலவு ஏற்படும். கண் திருஷ்டி உள்ளவர்களுக்கு உணவு சாப்பிடப் பிடிக்காது, எல்லோரிடமும் எரிந்து விழுவார்கள், அழுகை வந்துகொண்டேயிருக்கும், கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்.
இத்தகைய கண் திருஷ்டி நீங்க சில எளிய பரிகாரங்களைச் செய்தால் போதுமானது. அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால், கண் திருஷ்டி பிரச்னைகள் நீங்கி நலமாக வாழலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 கிராம்புடன் சிறிது பூண்டின் உரித்த தோலை சேர்த்து தூபம் போட திருஷ்டி விலகும். வீட்டின் வாசலில் ஆகாய கருடன் கிழங்கை வாங்கிக் கட்டுவது வீட்டினுள் கண் திருஷ்டிகள் வராமல் தடுக்கும்.
நல்ல மஞ்சள் நிற எலுமிச்சைப்பழம் எந்த புள்ளிகளும் இன்றி இருப்பதை வாங்கி இரண்டாக வெட்டி ஒன்றில் குங்குமம், இன்னொன்றில் மஞ்சள் தடவி வீட்டின் தலைவாசலில் வைப்பது திருஷ்டிகளை வீட்டினுள் வராமல் தடுக்க உதவும்.
மூன்று கோயில் குளங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் அதை ஒரு பவுலில் மூன்று நீரையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒன்றாக கலந்து வீட்டினுள்ளே மற்றும் வெளியே நன்றாக தெளித்து விட்டால் எப்பேற்பட்ட கண் திருஷ்டியும் விலகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த எளிய பரிகாரங்களைச் செய்து கண் திருஷ்டியை விலக்கி நலமாக வாழுங்கள்.