இராமேஸ்வரம் 22 தீர்த்த நீராடல் முறை!

அக்னி தீர்த்தம்
அக்னி தீர்த்தம்

ராமேஸ்வரத்திற்குச் சென்று இராமநாத சுவாமி திருக்கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் முறைப்படி நீராடி இராமநாத சுவாமியையும் பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று தீர்த்தங்களில் நீராடுவதற்கு முன்னர் அக்னி தீர்த்தம் என்ற இடத்திற்குச் சென்று கடலில் நீராட வேண்டும். இந்த அக்னி தீர்த்தம் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிரில் சற்று தொலைவில் அமைந்துள்ளது.

பொதுவாக, கடலில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நீராட வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆனால், இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் மட்டும் வருடத்தில் அனைத்து நாட்களிலும் நீராடலாம் என்பது சிறப்பு. இராமேஸ்வரத்தில் மூர்த்தியாக சிவபெருமானும், தலமாக சேது தலம் என்ற இராமேஸ்வரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் என்ற கடலும் அமைந்துள்ளது சிறப்பு.

இராவணனிடமிருந்து சீதா தேவி மீட்கப்பட்டதும் அவருடைய கற்பினை நிரூபிக்க இராமபிரான் அக்னி பிரவேசம் செய்ய வைத்தார். அப்போது சீதா தேவியின் கற்புத் திறனானது அக்னியையே சுட்டதாகவும் இதைத் தாங்க முடியாத அக்னி பகவான் கடலில் மூழ்கி தனது வெப்பத்தினைத் தணித்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்தத் தீர்த்தமானது அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

அக்னி தீர்த்தத்தில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை முதலான நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.

கடலில் சுமார் மூன்னூறு மீட்டர் தொலைவிற்கு ஆழம் இல்லை. ஆனாலும், நீங்கள் ஜாக்கிரதையாக நீராடி முடியுங்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடக்கு கோபுர வாசலுக்கு வர வேண்டும். இந்த வடக்கு கோபுர வாசல் வழியாகச் சென்றால்தான் 22 தீர்த்தங்களில் நீராட முடியும்.

அக்னி தீர்த்த நீராடல்
அக்னி தீர்த்த நீராடல்

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்குள் மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரமஹத்தி தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம்,  சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறதா? அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க!
அக்னி தீர்த்தம்

வடக்கு கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் 22 தீர்த்தங்களில் நீராட  தேவஸ்தானம் சார்பில் 25 ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்கள்.  இதற்கான ரசீதைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றால் முதல் தீர்த்தம் காணப்படும்.  ரசீதை அங்கே இருப்பவரிடம் கொடுத்தால் முதல் தீர்த்தத்திலிருந்து ஒரு சிறிய பக்கெட்டில் நீரை அள்ளி உங்கள் தலையில் ஊற்றத் தொடங்குவார். 

ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் வரிசை எண்ணைக் கொடுத்து அந்த தீர்த்தத்தின் பெயரையும் எழுதி வைத்துள்ளார்கள். இப்படியாக வரிசையாக 22 தீர்த்தங்களில் நீராடி துணிகளை உலர வைத்து பின்னர் கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தில் உள்ள இராமநாத சுவாமியை தரிசிக்கலாம். மூலவரை வழிபட்டு பிறகு தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசிக்க வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com