உயிரினங்கள் இவ்வுலகில் வாழ சூரியனே காரணம். அந்த சூரிய பகவானின் அருளைப் பெற உகந்த நாளாக ரத சப்தமி தினம் அமைந்திருக்கிறது. தை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் வரும் சப்தமி திதியே, 'ரத சப்தமி'யாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் சூரியன் தனது ரதத்தில் வடக்கு நோக்கிப் பயணம் ஆரம்பிக்கும் நாள் ரத சப்தமி நாளாகும். அன்று சூரியனை வழிபடுவதன் மூலம் நோய்கள் அகலும், ஆரோக்கியம் சிறக்கும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இந்த வருடம் தை அமாவாசை மாதக் கடைசியில் வந்ததால் இந்த வருடம் ரத சப்தமி தினம் மாசி மாதம் 4ம் தேதி, அதாவது பிப்ரவரி மாதம் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
சூரிய வழிபாடு என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆதி காலத்தில் பிரத்யட்ச தெய்வங்களாக, சூரியன், சந்திரன், அக்னி முதலியவற்றை நமது முன்னோர்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள். கண் கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து இந்த உலகில் சகல உயிர்களின் இயக்கத்துக்கும் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரிய பகவான்.
தமிழ் நாட்டில் கோயில்களில் நவகிரகங்களில் சூரியன் இடம் பெற்றிருப்பதால், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில், 'ரத சப்தமி' விழா கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தான, தர்மங்களுக்கு பன்மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் எந்தத் தொழிலும் பெருகி வளர்ச்சியடையும்.
அதேபோல, வடக்கே ஒரிசாவில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயிலிலும் மற்றும் இந்தியாவில் எங்கெங்கு சூரியனுக்கு தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கேயெல்லாம் ரத சப்தமி கொண்டாட்டங்கள், விசேஷ பூஜைகள் நடைபெறும். திருமலை, ஸ்ரீரங்கம் போன்ற வைஷ்ணவ கோயில்களிலும் ரத சப்தமி விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. தட்சிணாயன காலம் மார்கழி மாத போகியோடு முடிவதாகச் சொல்லப்பட்டாலும், தை முதல் நாளான பொங்கல் பண்டிகை உத்தராயண புண்யகாலமாகச் சொல்லப்பட்டாலும், ரத சப்தமி அன்று சூரியக் கடவுள் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வடக்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளே உத்தராயணம் ஆரம்பிக்கும் நாளாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.
ரத சப்தமி உத்ஸவம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு மினி பிரம்மோத்ஸவமாகவே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஏழு வாகனங்களில் காலை முதல் இரவு வரை நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருவீதி உலா வருவார். காலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனம், பிறகு 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், காலை 11 மணிக்கு கருட வாகனம், பிற்பகல் 1 மணிக்கு ஹனுமந்த வாகனம், மாலை 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனம், மாலை 6 மணிக்கு சர்வ பூபாள வாகனம் கடைசியாக இரவு 8 மணிக்கு சந்திர பிரபா வாகனங்களில் அருள்பாலிப்பார் ஸ்ரீ ஏழுமலையான். ஒரே நாளில் மலையப்ப சுவாமியின் ஏழு வாகனங்களின் சேவைகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காரணத்தால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள். இந்த ரத சப்தமி விழாவை, ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதை தரிசிப்பவர்களுக்கு சூரிய கிரக தோஷம் மற்றும் நவகிரக தோஷம் எதுவும் தாக்காது என்று நம்பப்படுகிறது.
சூரிய பகவான் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் இந்த சப்தமி திதியிலிருந்துதான் தனது ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. ரத சப்தமி நன்னாள் சூரிய ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) தனது தலை மீது வைத்துக் கொண்டு நீராட வேண்டும். பெண்கள் ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளவு மஞ்சள் தூளையும் அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல் நலத்தை வலுப்படுத்துகிறது என்பது ஐதீகம்.
ரத சப்தமியன்று வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம். அன்று சூரிய பகவானுக்குப் பிடித்தமான சர்க்கரை பொங்கலை பூஜையில் நிவேதனமாக வைக்க வேண்டும். ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமியை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவர். அன்று புனித நீர்நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம் முன்னோர்களுக்கான பித்ரு தர்ப்பணமும் செய்ய வேண்டும். ரத சப்தமி தினத்தன்று பிரத்யட்ச தெய்வமான சூரியக் கடவுளை தொழுது வணங்கி வாழ்வில் எல்லா நலங்களையும் வளங்களையும் எல்லோரும் பெறுவோம்.