
முருகப்பெருமானுக்கு சுருட்டை நிவேதனமாக படைக்கும் அதிசயக் கோவில் பற்றித் தெரியுமா? தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிக் கோவில் 1500 வருடம் பழமையானதாகும். இக்கோவிலில் தான் நிவேதனமாக சுருட்டு வழங்கப்படும் வினோதமான பழக்கம் இருக்கிறது. இந்த பழக்கம் ஏற்பட என்ன காரணம் என்பதை விரிவாக இப்பதிவில் காண்போம்.
முன்னொருக்காலத்தில் முருகரின் தீவிர பக்தரான கருப்பமுத்துபிள்ளை என்பவர் முருகனை தரிசித்தப் பிறகே உணவு உண்ணும் பழக்கத்தை வாடிக்கையாக கொண்டிருந்தார். முருகனுக்கு நடக்கும் திருப்பணியிலும் இவர் ஈடுப்பட்டிருந்தார்.
ஒருநாள் எப்போதும் போல முருகனை தரிசிக்க விராலிமலைக்கு வந்தார் கருப்பமுத்துபிள்ளை. அச்சமயம் வானம் நன்றாக இருட்டி மழைப் பெய்யத் தொடங்கியது. இதனால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. கருப்பமுத்து பிள்ளை ஒரு மேடானப்பகுதியில் தங்கினார். ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் கரைப்புரண்டு ஓடத் தொடங்கியது.
நீண்டநேரம் ஆகியதால் கருப்பமுத்துபிள்ளைக்கு பசிக்கத் தொடங்கியது. குளிர்த் தாங்க முடியாமல் சுருட்டை பற்ற வைத்தார். அருகில் மற்றொருவர் நிற்பதை பார்த்த கருப்பமுத்துபிள்ளை குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று அவருக்கும் ஒரு சுருட்டை கொடுத்தார். அந்த நபரும் சுருட்டை வாங்கிக் கொண்டு கருப்பமுத்துபிள்ளையை ஆற்றை கடக்க உதவினார். பிறகு கருப்பமுத்து கோவிலை அடைந்ததும் அங்கே முருகப்பெருமானின் முன்பு சுருட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை கருப்பமுத்துபிள்ளை அங்கிருந்த மக்களிடம் கூற அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். அன்றிலிருந்து முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்தியமாக மாலை வேளை வழங்கப்படுகிறது. பிறகு புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடைவிதிக்க, அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, ‘பிறர் துன்பம் கண்டு அன்பை வழங்கும் குறியீடாகவே சுருட்டு நிவேதனம் இருக்கிறது’ என்று கூற, அவர் தடையை நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை இப்பழக்கம் விராலிமலை முருகன் கோவிலில் வழக்கத்தில் உள்ளது. பக்தர்கள் சுருட்டை நிவேதனமாக பெற்றுச் சென்று வீட்டில் வைக்கிறார்கள். பக்தியுடனும், அன்புடனும் நாம் கடவுளுக்கு படைப்பதை அவர் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார் என்பதை உணர்த்துவதாக இந்நிகழ்வு அமைகிறது. இத்தலத்தில் முருகனை வழிப்பட்டால் ஆயுள், மனஅமைதி, குழந்தைப் பேருக்கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய தனித்துவம் வாய்ந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வருவது சிறப்பாகும்.