
இயற்கையாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இதில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்கள் உண்டு. இந்த கிரகணங்கள் ஏற்படும் போது அது மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9:56 க்கு துவங்கி 1:26 வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. கிரகண நேரங்களில் கோவில்களை மூடிவிடுவார்கள். ஆனால், இதற்கான சரியான காரணம் பலருக்கு தெரியாது? சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், கிரகண நேரங்களில் தீயசக்திகளின் பலம் மிகவும் அதிகமாக இருக்கும். அதனால் தான் கோவில்களை எல்லாம் அடைத்துவிடுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை.
கிரகண காலங்களில் கோவில்கள் அடைக்கப்பட்டிருக்குமே தவிர கோவில்களில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிப்பாடுகள் நடந்துக்கொண்டே தான் இருக்கும். திருவண்ணாமலை போன்ற கோவில்களில் கிரகணக் காலங்களில் தீர்த்தவாரி நடக்கும்; மேலும் விஷேச பூஜைகளும் நடக்கும். இதுப்போன்ற கிரகணக் காலங்களில் நடக்கும் பூஜையை 'உபராக பூஜை' என்று சொல்கிறார்கள்.
அத்தகைய பூஜைகளும், மந்திர பிரயோகங்களும் உலகில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நடைப்பெறும். இந்த நேரங்களில் விஷேசமான பூஜைகளை செய்வார்கள். அந்நேரம் மக்களை கோவிலுக்குள் அனுமதித்தால் இடையூறு ஏற்படும் என்பதால் தான் கோவில்களை கிரகண சமயங்களில் மூடிவிடுகிறார்கள். கிரகண காலத்தை 'புண்ணிய காலம்' என்று சொல்கிறார்கள்.
இந்த நேரத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று சொல்லப்படுகிறது. கிரகண காலத்தில் வீட்டில் குளித்துவிட்டு இறைவன் முன் அமர்ந்து வழிப்பாடு செய்துவிட்டு அவருடைய நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலே பல நன்மைகளை பெறலாம். சந்திர கிரகணம் இரவு நேரத்தில் வருவதால், நீங்கள் தான தர்மம் செய்ய வேண்டிய பொருட்களை இறைவன் முன் வைத்து வணங்கிவிட்டு அடுத்த நாள் எடுத்துச் சென்று தானம் செய்யலாம்.
கிரகணம் முடிந்தது குளித்துவிட வேண்டியது அவசியமாகும். கிரகண நேரத்தில் வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது, இந்த நேரத்தில் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு உணவு உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது.