
வீரபத்திரர் என்பவர் சிவபெருமானின் கோபத்தால் தோன்றிய கடவுள். தக்கன் செய்த யாகத்தை அழிக்க சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர்தான் இந்த வீரபத்திரர். நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் இவர், இடது கையில் கேடயமும், வலது கையில் தண்டாயுதமும் ஏந்தி இருப்பார். 'பத்ரம்' என்ற சொல்லுக்கு மங்கலம் (நன்மை) என்று பொருள். எனவே, வீரபத்திரர் வீரத்தால் நம்மைக் காத்து மங்கலங்களை அளிப்பவர். அப்படிப்பட்ட வீரபத்திரருக்கு ஏனோ நம் தமிழகத்தில் அதிக அளவில் கோயில்கள் இல்லை.
வீரபத்திரருக்கென்று அமைந்த கோயில்கள்: தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் கல்யாண வீரபத்திரர், கும்பகோணம், தாராசுரம், தஞ்சாவூர், அரியலூர், திருக்கடவூர் போன்ற இடங்களில் வீரபத்திரருக்கென்று தனி கோயில்கள் அமைந்துள்ளன.
1. மயிலாப்பூரில் வீரபத்திரர்: மயிலாப்பூரில் உள்ள வீரபத்திரர் ஆலயம் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் வீரபத்திரர், அபயாம்பிகை சன்னிதிகளும், சனீஸ்வரர், நவகிரகம், ஆஞ்சனேயர், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், விநாயகர், பெருமாள், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு துர்கை, துர்கை போன்ற உபசன்னிதிகளும் உள்ளன. இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் பங்குனி மாதம் அதிகார நந்தியும், பத்தாம் நாள் திருக்கல்யாணமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2. வெற்றிலைப் படல் உத்ஸவம் நடைபெறும் கோயில்: திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தலத்தில் வீரபத்திரருக்கென்று தனிக் கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இங்கு 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது. வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் உத்ஸவமும், வெற்றிலைப் படலும் உரியனவாக சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் 'மகா அஷ்டமி விரதம்' எனப்படும். இது வீரபத்திரரையும், பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விரதமாகும். இந்நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களால் அர்ச்சித்து, வெண்பட்டால் இவரை அலங்கரித்து வழிபடுகின்றார்கள்.
3. புராணம் கூறும் வீரபத்திரர்: தட்சன் சிவபெருமானை அவமதித்து யாகம் செய்த பொழுது கோபமடைந்த ஈசன், அந்தக் கோபத்தில் அவர் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்தான் வீரபத்திரர். சிவனின் வியர்வைத் துளிகளில் இருந்து ஆயிரம் வீரபத்திரர்கள் தோன்றியதாகவும், பின்னர் அவை யாவும் ஒன்றாக இணைந்து வீரபத்திரராக மாறியதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.
4. வழிபாடு: வீரபத்திரர் சைவம், சாக்தம், சமணம் ஆகிய மதங்களில் குறிப்பிடப்படுகிறார். சிற்ப சாஸ்திரங்களில் வீரபத்திரரின் உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற வீரபத்திரரை வழிபடும் வழக்கம் உள்ளது. பால், தயிர் போன்ற வெண்மை நிற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து, தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும், வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.
5. வழிபாட்டின் பலன்: வாழ்வில் வெற்றிகளைப் பெறவும், இழந்த செல்வத்தை திரும்பப் பெறவும், அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஆடிப்பூரம் போன்ற நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு. இவரது வழிபாடு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் உண்டாக்கும். மன நோய்கள் மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவற்றையும் விலக்கி வாழ்வு சிறக்க வழி வகுக்கும்.