
சபரிமலை கோவில், குறிப்பாக ஐயப்ப பக்தர்களுக்கு, ஒரு முக்கிய இந்து யாத்திரைத் தலமாக பிரபலமானது. சபரிமலை கோவில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், அனைத்து தரப்பு பக்தர்களையும் வரவேற்பதற்கும் இந்த கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் கோவில்களில் திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று.
இந்தக் கோவில் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை மலையின் உச்சியில் அமைந்துள்ளது . பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள 18 மலைகளால் சூழப்பட்ட இந்தக் கோவில் , உலகின் மிகப்பெரிய வருடாந்திர யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் தங்க முலாம் பூசப்பட்ட கூரையுடன் கூடிய கருவறையையும் , மேலே நான்கு தங்க முடிச்சுகளையும், இரண்டு மண்டபங்களையும் , பலிபீடத்தைக் கொண்ட பலிகல்புரத்தையும் கொண்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 புனிதப் படிகள் கோவிலுக்குச் செல்லும் பிரதான படிக்கட்டுகளாகும். 'இருமுடிக்கட்டு' இல்லாமல் எந்த பக்தர்களும் 18 புனிதப் படிகளில் ஏற முடியாது. 1985-ம் ஆண்டில், 18 படிகள் பஞ்சலோகத்தால் மூடப்பட்டன. ஐயப்பனின் நம்பிக்கைக்குரிய படைவீரர்களான கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் சத்திய தர்மங்கள் வடிவில் காவல் தெய்வங்களாக இந்த 18 படிகளை காத்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் மட்டும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வழிபாடு, பூஜைகள் நடத்தப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நாளை (வியாழக்கிழமை) வருகிறது.
இதற்காக சபரிமலை கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நடைபெறும் பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதை தொடர்ந்து ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி நடை திறக்கப்படும். பின்னர் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும். பின்னர் நடைபெறும் 19-ம்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை பாரம்பரிய வழக்கப்படி அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.