
சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து மட்டுமில்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து அந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும், விஷூ அன்றும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே பக்தர்களின் நினைவுக்கு வருவது 18 படிகள் தான்.
பக்தர்கள் விரதமிருந்து இருமுடி சுமந்து ஐயனை 18ம் படி ஏறிச்சென்று ‘சாமியே சரணம் ஐயப்பா’ என மனமுருக வேண்டி தரிசித்தலே மிகவும் சிறப்பானதாக கருப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாக செல்வோர் கருப்பு உடையும், பலமுறை சென்றவர்கள் காவி, நீல நிற உடையும் அணிவது வழக்கம்.
பூப்படையாத சிறுமிகளையும், மாதவிடாய் நின்ற பெண்களையும் மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து பக்தர்கள் தலையில் சுமந்து வரும் இருமுடியில் காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். இது சீவாத்மாவும் – பரமாத்மாவும் (சீவ - ஈஸ்வர) ஐக்கியத்தை குறிக்கும் தத்துவமாக கருதப்படுகிறது. இதுதவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்படும்.
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்களும் கோவில் நடை திறந்திருக்கும், மேலும் மண்டல பூஜைகளும் நடைபெறும். மண்டல பூஜை நாட்களில் அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா முன்னிட்டு தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும் என்றும், 10-ந் தேதி குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 11-ந்தேதி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும் என்றும், அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 14-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் வரும் 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும் என்றும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் விஷூ பண்டிகை அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதன்படி சபரிமலைக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாத பூஜையின்போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேரடியாக அனுமதிக்கப்பட்ட அதே நடைமுறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.