ஒரு குழந்தை பிறக்கும்போது அந்தக் குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளித்தள்ளி உலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவித வாயுவிற்கு 'ஜடம்' என்பது பெயர். கருவுற்று குழந்தை பிறந்ததும் முன்ஜன்ம உணர்வுகளை அகற்றி, இந்தப் பிறவியைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜட வாயு வந்து குழந்தைகளிடம் சேர்ந்து விடுவதுதான் உலக வழக்கமாகும்.
ஆனால், வைணவ ஆச்சாரிய புருஷரான நம்மாழ்வாரோ தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த ஜட வாயுவைக் கோபித்து, வென்று விரட்டி, முன் உணர்வுகளோடு விலகி பிறவிப் பந்த சூழலையும் வென்று அதற்கு ஒரு முடிவும் கட்டி விட்டார். அதனால் நம்மாழ்வாரை, 'சடகோபர்' என்று அழைப்பர். சடகோபம் என்றால் திருமாலின் திருவடி. ஜட வாயுவை வென்ற நம்மாழ்வாரை ஜடாரி என்ற பெயராலும் அழைத்து வந்தார்கள்.
பரமாத்மாவிடமே உள்ளுறைந்து வாழ்ந்தும், சஞ்சரித்தும் பரமாத்மாவை எல்லா விதத்திலும் அனுபவித்து வந்த நம்மாழ்வாரே பெருமானின் திருப்பாதங்களாக விளங்குகின்றார். ஆகவே, ஜடாரி என வழங்கும் நம்மாழ்வாரை எம்பெருமானின் திருப்பாதங்களாகக் கருதி நம் தலையிலும், வலது தோளிலும் அணிந்து அருள் பெறுவதே ஜடாரி சாத்தும் முறையின் பொருள் ஆகும்.