சகல நலன்களையும் பெற்றுத்தரும் ரிஷப சங்கராந்தி!

Lord siva and Nanthi bhagavan
Lord siva and Nanthi bhagavan

ந்தப்  பிரபஞ்சத்தைக் காத்தருளும் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு பல விரதங்கள் இருந்தாலும், அதில் இந்த 8 விரதங்கள் மிகவும் முக்கியமானவை.

1. சோமவார விரதம்: இந்த விரதம் திங்கட்கிழமை தோறும் அனுஷ்டிக்கப்பட்டாலும், கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

2.  பிரதோஷ விரதம்: இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து வரும் 13ம் நாள் திரயோதசி திதியில் கடைபிடிக்கப்படும் மிக விசேஷமான விரதமாகும்.

3. திருவாதிரை விரதம்: மார்கழி மாதத்தில் பௌர்ணமியன்று, திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

4. கல்யாண விரதம்: பங்குனி மாத உத்திரத்தன்று அம்பிகை உமையை சிவபெருமான் மணந்தார். அன்றைய தினத்தில் அதையொட்டி இந்த கல்யாண விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

5. உமா மகேஸ்வர விரதம்: சிவபெருமானின் அங்கத்தில் இட பாகத்தைப் பெற கடுமையான விரதம் மேற்கொண்டார் உமையம்மை. அதையொட்டி கார்த்திகை பௌர்ணமியன்று கடைபிடிக்கப்படும் விரதம் இது.

6. மகா சிவராத்திரி விரதம்: மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இரவில் கண் விழித்து சிவபெருமான் கோயிலில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து அனைத்து வயதினராலும் பக்தியோடு கடைபிடிக்கப்படும் விரதம் இது.

7. ரிஷப விரதம்: வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் இது.

8. சூல விரதம்:  இந்த விரதம் தை அமாவாசையன்று கடைபிடிக்கப்படுகிறது. பரசுராமர் இந்த விரதத்தை அனுசரித்து பலம்மிக்க கார்த்தவீர்யார்ஜுனனை வதைத்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாவற்றிலும் விட மிகச் சிறந்ததாகப் போற்றிக் கடைபிடிக்கப்படுவது வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியன்று வரும் ரிஷப விரதம் ஆகும். இந்த ரிஷப விரதம் பழங்காலத்திருந்தே நடைபெற்று வருகிறது. சிவபெருமானைக் குறித்து ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பகவான் மகாவிஷ்ணு இந்த விரதத்தை அனுசரித்து கருட வாகனத்தைப் பெற்றதாக புராணம் கூறுகிறது. இந்திரன் இந்த விரதத்தின் மகிமையால் ஐராவதத்தையும், சூரிய பகவான் ஏழு குதிரைகளை கொண்ட தேரையும், குபேரன் புஷ்பக விமானம் பெற்றதாகவும் ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
மறந்தும் கூட வாழ்வில் செய்யக் கூடாத பாவங்கள்!
Lord siva and Nanthi bhagavan

அந்தக் காலத்தில் இந்த ரிஷப விரதம் மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், செல்வத்தை இரட்டிப்பாக்கவும் அனுசரித்தனர். தற்போதைய காலத்திலும் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெற இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

சிவபெருமானின் வாகனமாக இருக்கும் ரிஷபத்திற்காக மேற்கொள்ளப்படும் விரதம் இது என்றும், சிவனுக்கு இருக்கும் இந்த விரதம்தான் மிகவும் பலம்மிக்க விரதம் என்றும் கூறப்படுகிறது. இதை, ‘ரிஷப சங்கராந்தி’ என்றும் சிறப்பித்துக் கூறுகின்றனர். இந்த விரத நாளில் அதிகாலையில் எழுந்து சிவபெருமானை வணங்க வேண்டும் என்றும் உணவு ஏதும் உண்ணாமல் நம்மிடம் வெள்ளியால் செய்யப்பட்ட ரிஷப விக்ரகம் இருந்தால் அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இல்லாதவர்கள் சிவபெருமான் படத்திற்கு அலங்காரம் செய்வித்தும் பூஜை செய்யலாம். ரிஷப விரதம் அன்று சிவனுக்கு அன்னம், பாயசம் ஆகியவை நைவேத்தியமாக வைத்து  சிவபுராணம், சிவனுக்குரிய அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை ஓதி, துதித்து விரதம் இருந்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் இன்று பட்டினியாக இருக்க முடியாவிட்டால் பால் மற்றும் பழங்களை மட்டுமே புசித்து விரதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று அருகேயுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

சிவனுக்குரிய இந்த முக்கியமான, 'ரிஷப விரதம்' இன்று (14.06.2024) வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அனைவரும் இந்த விரதத்தை கடைபிடித்து சிவபெருமானின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா வளங்களையும், கோடி நன்மைகளையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com