சகல தோஷம் தீர்க்கும் கதலி லட்சுமி நரசிம்மப் பெருமாள்!

உக்ர கதலி நரசிம்மர்
உக்ர கதலி நரசிம்மர்
Published on

பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களை நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதில் சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மழைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும்.

ஆயிரம் வருடங்கள் பழைமையான இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக  விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளைபொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப்பழங்கள் தொடர்ந்து  காணாமல் போக, அப்பெண் லட்சுமி அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார்.

அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழைப்பழத்திற்கு தானே காரணம் என்றும், அவர்கள் தங்குமிடத்தில் கதலி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக தாம் எழுந்தருளி உள்ளதாகக்’ கூறினார். நான்காம் நாள் காலை தலைவர்  மக்களோடு பெருமாள் கனவில் கூறிய இடத்தை தேடிப் பார்க்கையில் சுயம்பு வடிவாக ஸ்ரீமன் நாராயணன் அங்கு காட்சி கொடுத்தார். நான்காவது நாள் சுயம்பு மூர்த்தி கிடைத்ததால் தசாவதாரத்தின் நான்காவது அவதாரமான நரசிம்ம மூர்த்தி அம்சமாக அவ்விடத்தில் அந்த சுயம்பு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். பிறகு அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ரூபத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். (கதலி என்றால் வாழைப்பழம் என்று ஒரு பொருள் உண்டு.)

கருவறையில் மூலவர் கதலி நரசிம்மர் சங்கு, சக்கர, அபயக்கரத்துடன் அழகிய திருமகளை தனது மடியின் மீது அமர்த்தி, ஆலிங்கன திருக்கோலத்தில் தாமரை பீடத்தின் மீது லட்சுமி நரசிம்மராக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு உக்கிர மூர்த்தியாக காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றித் தரும் வைட்டமின் எது தெரியுமா?
உக்ர கதலி நரசிம்மர்

துவார பாலகர்களை வணங்கி ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கருவறைக்கு எதிரே பெருமாளை வணங்கிய கோலத்தில் மேற்கு நோக்கி கருட சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உத்ஸவமூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளும் அருள்பாலிக்கின்றனர். உள் பிராகாரத்தில் குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர், பிணிகளைப் போக்கும் தன்வந்திரி மற்றும் திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள், யோக நரசிம்மர் உள்ளிட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. ஞானத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவரும் இங்கு உறைகிறார்.

கோயிலின் முகப்பில் 41 அடி உயர ஆஞ்சனேயர் மற்றும் மகா மண்டபத்தில் 12 ஆழ்வார்கள், உடையவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ தேசிகன் மற்றும் கூரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.

தல விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன. இத்தலத்தில்  சித்ரா பௌர்ணமி விழா மற்றும் ஏகாதசி திருமஞ்சனமும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இங்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்து பெருமாளை மனம் உருகி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணப் பேறு , புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் வாழ்வில் வளங்கள் வந்து சேரும் என்பதும் ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com