
இறைவன் தனது அருளால் மனிதனை வசப்படுத்துவது போல மனிதனும் தனது பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தியில் ஒன்றுதான் சங்காபிஷேகம். அதிலும் சிவன் அபிஷேகப் பிரியர் என்பதனால் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்ய பரமானந்தம் அடைந்து பக்தர்களின் சகல தோஷங்களையும் போக்குகிறார்.
சங்கு செல்வத்தின் சின்னமாகவும், இயற்கையாகக் கிடைப்பதாலும் சுட்டாலும் இது வெண்மை தருவதாலும், மனித மனங்களும் சங்கை போல வெண்மையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும் சோமவார தினத்தில் சங்கில் புனித நீர், பால், பன்னீர், பஞ்சகவ்யம் போன்றவற்றை நிரப்பி அந்தத் தீர்த்தத்தை கங்கையாக பாவித்து ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்ய வேண்டும். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.
‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே
பவமாநாய தீமஹி
தந்நோ சங்க ப்ரேசோதயாத்’
சோமவாரம் அதாவது திங்கட்கிழமை சந்திரனை குறிக்கும். அந்த சந்திரனையே பிறையாக சிரசில் அணிந்திருக்கும் ஈசனுக்குரிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வதால் சந்திர பலம் கிடைத்து மனம் தெளிவு பெறும்.
க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படியான சாபத்துக்கு ஆளானான் சந்திரன். சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவது எப்படி எனத் தவித்தவனுக்குக் கிடைத்ததுதான், இந்த வழிபாடு. கடும் தவமிருந்து, ஒரு கார்த்திகை மாத சோம வார நன்னாளில் விரதம் மேற்கொண்டு, சிவ பூஜை செய்தான். அதில் மகிழ்ந்து குளிர்ந்த சிவபெருமான், சாபத்தில் இருந்து அவனுக்கு விமோசனம் தந்தருளினார். அது மட்டுமின்றி, சந்திரக்கலையில் ஒன்றைப் பிறையாக்கி, தனது தலையில் கங்கைக்கு நிகராகச் சூடி சந்திரனுக்குப் பெருமை சேர்த்து அருளினார். இதனால்தான் சிவபெருமானுக்கு, சந்திரசேகரர் எனும் திருநாம்ம் அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.
எனவே, பெண்கள் சோமவார சங்காபிஷேம் செய்தாலோ அல்லது அந்த அபிஷேகத்தில் விரதமிருந்து கலந்து கொண்டாலோ அவளது கணவனை எல்லா நோய்களில் இருந்தும் காத்தருள்வார் சிவபெருமான். அதோடு, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இனிதே வாழச் செய்வார் என்பது ஐதீகம்.
சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் சாத்தி, ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள். 1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.
பிறகு அந்த நீரைக் கொண்டு, சிவலிங்கத் திருமேனிக்கு திருமுழுக்காட்டுகிற திருக்காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த அபிஷேகத்தை தரிசிப்பதும், சிவபெருமானுக்கு வில்வமும் வெண்மை நிற மலர்களும் சமர்ப்பித்து வேண்டுவதும் சகல பலன்களையும் வாரி வழங்கும். சங்காபிஷேக பூஜையை தரிசிப்பது மகா புண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் குடும்பத்தில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தருளும், முக்தி பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.