தினமும் கொஞ்ச நேரமாவது சுவாமியை நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது மனம் தெளிவாகும், புத்தியும் கூர்மையாகும், படிப்பும் நன்றாக வரும், அனைத்தும் நலமாகும்.
மனசுக்கு நிம்மதி கிடைக்க நல்லவர்களுடைய சேர்க்கை சத்சங்கம் ஏற்பட வேண்டும். பரம்பொருளின் சேர்க்கை, அதன் மூலம் கிடைக்கும் ஆண்டவனை பற்றிய நினைப்பு ஏற்படும். அது இருந்து விட்டால் மனதில் மற்ற கவலைகள் இருக்காது.
உடம்பில் அழுக்கு போக தினமும் குளிக்கிறோம். ஆனால், மனதை பளிச்சென்று சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறோம்? மனசு சுத்தமாக நல்லோர்கள் நட்பு தேவை. பெரியோர்களின் அருளாசிகளும் தேவை.
பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். சயின்ஸ் விதிப்படி விளைவு இருந்தால் அதற்கான காரணம் இருந்தே ஆக வேண்டும். இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நம் முன்னமே செய்த நல்லது, கெட்டதுகள்தான் காரணம்.
இதற்கு ஈஸ்வரனை துணை கொள்வதே முக்கியம். நாம் நல்லதே பண்ணிக்கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார், கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான சத்காரியம் செய்ய வேண்டும்.
அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. நமக்கே அழகு செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்திற்குதான் வழிகாட்டும்.
கர்மானுஷ்டானங்களை பண்ணும்போது, ‘நாம் பண்ணுகிறோம்’ என்ற அகம்பாவத்தோடு பண்ணக் கூடாது. ‘கர்மாவை பண்ணக்கூடிய சக்தியை நமக்கு ஈஸ்வரன் கொடுத்தான், அதற்கு வசதியும் கொடுத்தான், பண்ண வேண்டும் என்ற புத்தியும் கொடுத்தான்’ என்று நினைத்து ஈசுவரார்ப்பணம் பண்ண வேண்டும்.
பேச்சினாலும், காரியத்தினாலும், எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு, மனிதனுக்கு நன்மையை உண்டாக்குவது சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே. மகான்கள் செய்கிற ஆசீர்வாதம், அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும்.
எல்லோரும் தியாகம் பண்ண வேண்டும். அதிலும் முக்கியமாக, ‘தியாகம் பண்ணினேன்’ என்ற எண்ணத்தையும் சேர்த்து தியாகம் பண்ணி விட வேண்டும். நான் செய்யக்கூடியதெல்லாம் நம் தர்ம சாஸ்திரங்களில் சொல்லி இருப்பவற்றை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான்.
சாஸ்திரங்கள் எதை எதை உங்கள் கடமை என்று விதித்து இருக்கின்றதோ, அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுதான் எனது கடனாகும். இதைச் செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு. பெயர் எனக்கு.
கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரி. அதுவே நாக்கின் பயன். உனது குறைகளை கடவுளிடம் சொல்லி முறையிடு. தினமும் அரை மணி நேரமாவது மௌனமாக இரு. தர்மம் செய்ய வேண்டும் என விரும்பினால் உடனடியாக செய்து விடு. பிறருடைய குறைகளை அன்பால் திருத்து. பொறாமையை கைவிடு. நிம்மதியாக வாழ்வாய். கடவுளின் அருளைப் பெற இசையுடன் பாடு.