Sri Mahavishnu
Sri Mahavishnu

சனி பகவான் கெடுபலன்களைக் குறைக்கும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!

Published on

பெருமாளுக்கு மிக உகந்ததாகக் கருதப்படும் புரட்டாசி மாதப் பிறப்பு இன்று. புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வரிசையாக பண்டிகைகள் களைகட்டத் தொடங்கிவிடும். எல்லா மாதங்களும் இறைவனை வழிபடக்கூடிய மாதங்கள்தான் என்றபோதும், புரட்டாசி மாதம் மட்டும் பெருமாளை வழிபட உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமாக பெருமாள் வழிபாடுகள் நடைபெறும்.

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே எல்லா திசைகளிலும் கோவிந்த நாமங்கள் ஒலிக்கத் தொடங்கி விடும். வீடுகளிலும் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்படி என்னதான் இருக்கு இந்த புரட்டாசி மாதத்தில்?

வழக்கமான காலங்களில் பெருமாளை வழிபடுவதைக் காட்டிலும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது புரட்டாசியாகும்.

புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற மகாவிஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. பெருமாளின் அம்சமாகக் கருதப்படும் புதனுக்குரிய வீடு கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான்.

எனவே, இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோத்ஸவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன. புதன் கிரகத்திற்கு நட்பானவன் சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஜிம்மிற்கு போகாமலேயே உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம்!
Sri Mahavishnu

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது பெருமாளுக்கு உரிய பூஜைகள் செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

logo
Kalki Online
kalkionline.com