ஜிம்மிற்கு போகாமலேயே உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம்!

fit body
fit body
Published on

ஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும். வொர்க் அவுட் செய்வதை விட உணவில் அதிக கவனம் செலுத்தினால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்‌. வீட்டு உடற்பயிற்சிகள் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஜிம்மிற்கு செல்லாமலேயே உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும்.

வெளிப்புற நடவடிக்கைகள் என்பது நடைப்பயிற்சி அல்லது ஜாகிங். இவற்றுடன் ஆரோக்கியத்திற்கு மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நடன பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நடனம் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நமக்கு பிடித்த இசையை போட்டு அதற்கு ஏற்றவாறு நமக்கு தெரிந்த வகையில் உடல் அசைவுகள் கொடுக்கும் நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாகும்.

நீச்சல் பயிற்சி மற்றொரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இதனை செய்ய பெரிய அளவில் எந்த உடற்பயிற்சி உபகரணமும் தேவையில்லை. யோகா, தியானம் ஆகியவையும் நம் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். லிப்ட்டுகளுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்த, சுறுசுறுப்புடன் கூடிய எடை குறைத்தலுக்கு உதவியாக இருக்கும். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும் உதவும். அருகில் உள்ள இடங்களுக்கு வண்டியைப் பயன்படுத்தாமல் நடையை கட்டுவதுதான் சிறந்த பயிற்சி.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிப்பதும், காலை உணவுக்கு ஏதேனும் ஒரு பழத்தை ஒரு கப் அளவில் (ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்று) எடுத்துக்கொள்வதும் நல்லது. வீட்டில் பழம் எதுவும் இல்லாத நாட்களில் 2 இட்லி அல்லது 2 தோசை, ஒரு கப் அதிகம் பால் சேர்க்காத காபி அல்லது டீ எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் 10 வழிகள்!
fit body

எந்த உணவையும் எடுத்துக்கொள்ளும்பொழுது வேக வேகமாக  உண்ணாமல், நிதானமாக உணவை மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நாம் சாப்பிடும் உணவில் நம் கவனம் செல்லும். உணவை எடுத்துக்கொள்ளும் சமயம் டிவி பார்ப்பது, செல்போனை பயன்படுத்துவது வேண்டாம். உணவை நன்கு மென்று அரைத்து சாப்பிடவும். தண்ணீர் போதிய அளவு அருந்துதல் அவசியம். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் மிதமான சூட்டில் உள்ள நீரை அருந்துவது மிகவும் நல்லது.

ஈவினிங் ஸ்நாக்ஸாக எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை தவிர்த்து, வேக வைத்த வேர்க்கடலை, காய்கறி சாலட், பழ சாலட், சுண்டல் வகைகள் என எடுத்துக் கொள்வது சிறந்தது. இரவு உணவை படுக்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்வது நல்லது. அழகாக ஆவியில் வேகவைத்த இட்லி, புட்டு போன்றவை வயிற்றுக்கு இதம் தருவதுடன் உடலையும் அதிகம் சிரமப்படுத்தாது. அதிக புரதம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை  எடுத்துக் கொள்வதுடன், குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளையும் தேர்வு செய்து உண்ணலாம். ஒரு உணவு அட்டவணையை உருவாக்கிக் கொண்டு அதன்படி செயல்பட உடற்பயிற்சி கூடம் தேவையில்லாமலே நம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com