
ஆடி மாதத்தில் சங்கரன்கோவில், சங்கரநாராயணர் கோயிலில் பன்னிரண்டு நாட்கள் கோமதி அம்மனின் ஆடித் தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று (28.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, அடுத்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கோமதி அன்னையின் ஆடித்தபசு நிகழ்வுடன் நிறைவடைகிறது. இடையில் ஆகஸ்ட் 5ம் தேதி திருத்தேரோட்டம் வெகு விமரிசையுடன் நடைபெற உள்ளது.
சங்கரன்கோவில் ஆடித்தபசு விசேஷம் மிகவும் பிரபலமானதாகும். இந்த வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று. பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் அடித்தவசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோமதி அம்பாளை வழிபடுவார்கள். சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்மன் சன்னிதிகளை உள்ளடக்கிய இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தை பக்தர்கள் 108 முறை சுற்றுவதுதான் ‘ஆடிச்சுற்று’ எனப்படுவதாகும்.
பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து கோமதியம்மனை வேண்டி ஆடிச்சுற்று சுற்றுவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம் தொடங்கிய பின்னர் ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழாவிற்குள் இந்த ஆடிச்சுற்றை முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தில் தபசு சுற்றும் சுற்றுவதால் பக்தர்கள் அம்பாளின் அருளைப் பெறுதலோடு, அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அம்பாள் ஒரு காலில் நின்ற தவசு புரிந்தது போல, பக்தர்கள் ஒரு காலில் நின்று வழிபட்டு கோயிலை சுற்றி வந்து அம்மனின் அருளை வேண்டி வழிபடுகிறார்கள். இந்தத் திருவிழாவில் கோமதி அம்மன் சிவபெருமானை கணவனாக அடைய வேண்டிய தபசு செய்யும் காட்சி நடைபெறும். இந்த ஆடிச்சுற்றை பக்தர்கள் 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.
இந்த ஆடிச்சுற்றின் மூலம் ஒரு காலில் நின்று தபசு காட்டி அருளும் அம்பாளின் கால் வலியை தாங்கள் ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை. அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுவதாக ஐதீகம்.
பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று சுற்றி வருவார்கள். மாணவ, மாணவிகள், வாலிபர்கள், கன்னிப் பெண்கள், வயதான ஆண், பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுவது வழக்கம்.
ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த ஆடித் தபசு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடித் தபசு நாளில் அம்பிகையையும் சங்கர நாராயணரையும் வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் நடக்கும்.