சப்த மாதர்கள் பற்றி அறிந்திருப்போம். அதேபோல் சப்த கன்னியர் பூஜைகளையும் பார்த்திருப்போம். சப்த மாதர்களுக்கும் சப்த கன்னியர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? யார் இவர்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சப்த மாதர்கள் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளதை குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. ‘குமார சம்பவம்’ சப்த மாதர்கள் சிவபெருமானின் பணிப்பெண்கள் என்று குறிப்பதால் சிவாலய திருச்சுற்றில் சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவதாகவும் ஒரு கூற்று இருக்கிறது.
மிகப் பழைமையான சிவன் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இவர்கள் அம்பிகையின் அம்சங்களே என ‘தேவி மஹாத்மியம்’ கூறுகிறது. பிராம்மி அம்பிகையின் முகத்திலிருந்தும், மகேஸ்வரி அம்பிகையின் தோளிலிருந்தும், கௌமாரி முருகப் பெருமானின் அம்சமாகவும், வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்தும் , விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய மூவரின் அம்சங்களோடு வாராஹியும், இந்திராணி இந்திரனின் அம்சமாகவும், ஈசனின் நெற்றிக்கண்களில் இருந்து தோன்றிய பத்ரகாளி சாமுண்டியாகவும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறும்.
சப்த மாதர்கள் ஆரம்ப நிலையில் தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள் முக்கியத்துவம் பெற அவர்களின் துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு கோயில்களில் கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் சில கருத்துகள் கூறுகின்றன.
இனி, சப்த கன்னியருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? எனும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. சப்த மாதர்கள் பெரிய ஆகம முறையான கோயில்களிலே குடி கொண்டிருப்பார்கள். ஆனால் சப்த கன்னியர் கிராமத்தின் பெண் தெய்வங்களாக கிராமத்து ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளிலே அமைந்திருக்கும் கன்னிமார் கோயில்களில் இருப்பார்கள்.
பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன் ஆகிய சப்த கன்னிமார்கள் தனித்து வழிபடப்படுவதில்லை. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர். கன்னிமார்களின் பூஜை முறைகளும் சப்த மாதர்களின் பூஜை முறைகளும் வேறுபட்டவை. நகரத்திற்கு நகரம் பெயர்களும் மாறுபடுவது குறிப்பிடத்தக்கது.
கன்னிமார் வழிபாடு என்பது நாட்டார் வரலாற்றில் முக்கியமான ஒன்று. மணமாகாமல் மாண்டு தெய்வநிலை பெற்ற பெண்களைப் போற்றும் வகையில் எழுந்தது கன்னிமார் வழிபாடு. கன்னிமார் கோயில்களிலே வம்புலி காவல் காக்கும் என்பதோடு கன்னிமாரின் ஏழு அண்ணன்மாரும் காவலுக்கு இருப்பார்கள். முற்காலத்தில் தியாகப் பெண்களை குறிக்கும் வகையில் 7 கற்களை நட்டு வழிபட்டு வந்தனர். பின்னர் காலப்போக்கில் பெண் உருவங்கள் இதில் இடம் பெற்றதாய்த் தெரிகிறது. சப்த கன்னியரோடு விநாயகரும், வீரபத்திரரும் இருப்பார்கள். சில இடங்களில் ஐயனாரும் காணப்படுவார்.
ஆக, புராண வரலாறு அறிவித்த கண்ணால் காணாத தெய்வங்களின் சொரூபமாக ஆலயங்களில் சப்த மாதர்களும் , கண்ணால் கண்ட வீரத்தின் சொரூபமான கன்னிப் பெண்கள் கிராமங்களில் சப்த கன்னிமார்களாகவும் வழிபடப்படுகிறார்கள் என்பதை அறிவோம்.