
பொதுவாக வௌவால்கள் என்றாலே அசுத்தமான இடத்தில் குடியிருக்கும் வினோத பறவைகள் என்று தான் நாம் நினைத்திருப்போம். மேலும் கதைகளிலும் திரைப் படங்களிலும் வவ்வால்கள் தீய சக்தியின் குறியீடாக காட்டப்படுகின்றன. பாழடைந்த கட்டிடங்களிலோ, இடிந்து போன வீடுகளிலோ வௌவால்கள் பறப்பதை நாம் பார்த்திருக்கலாம். அவை அங்கங்கே தலை கீழாக தொங்கிக்கொண்டு இருக்கும். உலகம் முழுக்க வௌவால்களில் பல வகைகள் உள்ளன.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் வௌவால்கள் கடவுளாக வழிபடப்படுகின்றன என்று கூறினால் அது ஆச்சரியமான செய்தியாக இருக்கும்! இந்த ஆச்சரியமான வழிபாடு ஒரு வினோதமான கிராமத்தில் நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில், சர்சாய் என்ற சிறு கிராமத்தில் ஒரு விசித்திர கோயில் உள்ளது. அங்கு வௌவால்களை கிராம தெய்வங்களாக வணங்குகின்றனர். இங்குள்ள மக்கள் வௌவால்களை செழிப்பின் அடையாளமாக கருதுகின்றனர். அங்கு மக்கள் வௌவால்களை வணங்குவது மட்டுமல்லாமல், வௌவால்கள் தங்களைப் பாதுகாக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.
சர்சாய் கிராம மக்கள் வௌவால்கள் வாழும் இடத்தில் பணப் பற்றாக்குறை இருக்காது என்று கருதுகின்றனர். மக்கள் இந்த வௌவால்களை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியுடன் ஒப்பிடுகிறார்கள்.
1402 ஆண்டில் திருஹத் மன்னர் சிவா சிங் என்பவர் சர்சாய் கிராமத்தின் மையப்பகுதியில் ஒரு ஏரியை வெட்டினார். இந்த ஏரியை சுற்றியுள்ள 50 ஏக்கர் நிலப்பகுதியில் ஏராளமான கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த பழங்கால ஏரிக்கு அருகில் இருக்கும் ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட மரங்களில் ஏராளமான வௌவால்கள் தங்கியுள்ளன.
இந்த வௌவால்களைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சர்சாய் கிராம மக்கள், வௌவால்கள் வந்ததிலிருந்து, இந்த கிராமத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருப்பதாக நம்புகிறார்கள். கிராம மக்கள் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன்பு வௌவால்களை வணங்கிவிட்டுதான் தொடங்குகிறார்கள்.
ஒரு காலத்தில் வைசாலியில் ஒரு பெரிய தொற்றுநோய் பரவி பலர் உயிரிழந்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் வௌவால்கள் முதன்முதலில் இந்த கிராமத்திற்கு வந்தது. அதன் பிறகு இந்த கிராமம் மற்றெந்த ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதில்லை என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.
மனித உடலை பாதிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் ரசாயனங்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட வாசனையை இந்த வெளவால்கள் வெளியிடுகின்றன என்பதால் கிராமவாசிகளின் கதையில் ஒரு உண்மை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிராமத்தில் உள்ள அரச மரங்களில் தங்கியுள்ள வௌவால்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. கிராமவாசிகள் இந்த வௌவால்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாக்கவும் செய்கிறார்கள். இந்த வௌவால்களுக்கு வழக்கமான காணிக்கை செலுத்தாமல் எந்த ஒரு நல்ல நிகழ்வும் இங்கு நடத்தப்படுவதில்லை.
கிராமவாசிகளின் கூற்றுப்படி சர்சாய் கிராமத்தை சேராத புதிய நபர் யாராவது இரவில் ஏரிக்கு அருகில் சென்றால் வௌவால்கள் தொடர்ச்சியாக கத்தத் தொடங்கி விடுகின்றன. ஆனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த யாராவது ஏரி பக்கம் சென்றால் எந்த ஒரு சப்தமும் எழுப்பாமல் அவை அமைதியாக இருக்கின்றன. புதிய நபர்கள் ஊருக்குள் வந்தால், வௌவால்கள் இவ்வாறு ஒலி எழுப்பி, எச்சரிக்கின்றன.
இந்த வௌவால்களைப் பார்க்க கிராமத்திற்கு ஏராளமான பயணிகள் வந்தாலும் அரசு சார்பில் எந்த ஒரு வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தி தருவதில்லை என்று கிராம மக்கள் நீண்ட காலமாக ஏமாற்றத்தில் உள்ளனர். மாநில அரசு உள்ளூர் மேம்பாட்டிற்கும், சுற்றுலா பயணிகளின் வசதிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.