வௌவால்களின் குழந்தைகள் காப்பகமாக விளங்கும் உலகின் மிகப்பெரிய வௌவால் குகை!

Bat in Bracken Cave
Bat in Bracken Cave

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் பிராக்கன் குகை (Bracken Cave), உலகின் மிகப்பெரிய வௌவால் குகையாகும். இக்குகை 100 அடி அகலம் உள்ள பிறை வடிவக் குகையாகும். இந்தக் குகையில் இரண்டு கோடி வௌவால்கள் வரை இருக்கின்றன. இவற்றுள் குறைந்தது ஐம்பதாயிரம் குட்டி வௌவால்களாவது இருக்கும். இந்தக் குகைக்குப் போனால் வௌவால் குட்டிகளைக் குவியல் குவியலாகப் பார்க்கலாம்!

Bat in Bracken Cave
Bat in Bracken CaveImg Credit: cepf

இக்குகையில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வௌவால் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருக்கும் வௌவால்கள், அதிகக் குளிர்காலத்திற்குப் பிறகு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குட்டிகளைப் பெற்றெடுப்பதற்காக இக்குகைக்கு வருகின்றன. இப்படி, ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மைல்கள் பறந்து 20,000,000 வெளவால்கள் வரை இக்குகைக்கு வருகின்றன. ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இந்த வௌவால்கள் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. 

வௌவால்களின் குழந்தைகள் காப்பகமாக இருக்கும் இந்தக் குகையில் ஒரு சதுர அடிக்கு 400 வௌவால் குட்டிகளுக்கும் மேல் இருக்கின்றன. தாய் வௌவால்கள், இடஞ்சார்ந்த நினைவகம், குரல்கள் மற்றும் வாசனை ஆகியவற்றின் கலவையின் மூலம் தங்கள் குட்டிகளைச் சரியாக அடையாளம் கண்டு பாலூட்டுகின்றன என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குப் பின்பு, அந்த வௌவால் குட்டிகள் பறக்கக் கற்றுக் கொள்கின்றன. 

இப்படிப் பறக்கும் பயிற்சியில், மலைச்சுவர்களில் மோதி பல வௌவால் குட்டிகள் இறந்து போய்விடுகின்றன. குகைக்கு வெளியில் பறக்கும் போது, கீழே விழும் வௌவால் குட்டிகள், அங்கிருக்கும் வண்டுகள் கூட்டத்திற்கு இரையாகி விடுகின்றன. இவைகளையெல்லாம் கடந்து, உயிர் பிழைக்கும் வௌவால் குட்டிகள் மட்டும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றன. 

சூரியன் மறைவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக இரை தேடுவதற்காகக் குகையை விட்டு வெளியே வரும் வௌவால்கள், அந்தப் பகுதியைச் சுற்றிலுமுள்ள இடங்களுக்குச் சென்று வண்டுகளை உணவாக உட்கொண்டுவிட்டு மீண்டும் குகைக்குத் திரும்புகின்றன. 

இதையும் படியுங்கள்:
கரடிகளுக்கு அளிக்கப்படும் கொடுமை! இப்படியெல்லாமா நடக்குது?
Bat in Bracken Cave

இங்கிருந்து செல்லும் வௌவால்கள் உணவுக்காகப் பல டன் பூச்சிகளை உண்கின்றன. வௌவால்கள் பருத்தியைப் பாதிக்கும் பூச்சிகளைப் பெருமளவில் அழிப்பதால், தென்மத்திய டெக்சாஸ் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகளுக்கு ஓர் ஆண்டில் ஏறத்தாழ 7,40,000 டாலர்கள் மிச்சமாகிறது என்கின்றனர். 

பன்னாட்டு வௌவால் பாதுகாப்பகம் (Bat Conservation International) எனும் தனியார் அமைப்பு இவ்விடத்தைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறது. இங்கிருக்கும் வௌவால்களைப் பார்க்க ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சரியானதாக இருக்கின்றன. சுமார் 1/2 மைல் தொலைவு சரளைக் கற்களைக் கொண்ட பாதையில் பயணித்துக் குகைப்பகுதியினையும், அங்கிருக்கும் வௌவால்களையும், குட்டி வௌவால்களையும் பார்வையிடலாம். 

சூரியன் மறைவுக்கு முன்பாக இருக்கும் மூன்று மணி நேரம் வௌவால்கள் இரை தேடச் செல்லுமென்பதால், அவ்வேளைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

இக்குகைப் பகுதியில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இப்பகுதிக்குள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு வருவதற்கும் அனுமதியில்லை. குகைக்குச் செல்லும் வழியில் நடந்து செல்லும் போது உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிடுவதற்கும் அனுமதியில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com