இந்து புராணங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தெய்வம் என்றால் அது காளி தேவிதான். ஆனால், என்னவோ காளியின் உருவம் பலருக்கும் பயத்தைத்தான் கொடுக்கிறது. தோற்றத்தை பார்த்து பயப்படத் தேவையில்லை. அவளும் அனுகூல மாதாதான். காளிக்கு பன்னிரண்டு வடிவங்களும், பெயர்களும் உள்ளன என்பதை எத்தனை பேர்கள் அறிவோம். அந்தப் பன்னிரு காளி தேவியர் குறித்து அறிவோம்.
1. ஆதிய மாகாளி: கல்கத்தா காளிக்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் பெருமளவு வணங்கப்படும் தெய்வமாவாள் இவள்.
2. மாதங்கி காளி: அறிவின் தெய்வமாகப் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் உக்கிரமான வடிவமாக இவள் கூறப்படுகிறாள். இத்தேவி சண்டாலினி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்.
3. சின்ன மஸ்தா காளி: ஆக்கம், அழிவு இரண்டையும் குறிப்பிடும் அம்சமாக கருதப்படுகிறாள். துண்டிக்கப்பட்ட தலையுடன் காட்சி தரும் இவளது தோற்றம் எல்லோருக்கும் ஒரு பயத்தையே உண்டாக்குகிறது.
4. ஷம்ஸனா காளி: துண்டிக்கப்பட்ட இரு கைகளுடன் மட்டுமே சித்தரிக்கப்படும் இவள் சுடுகாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை இடுபவளாகக் கூறப்படுகிறாள்.
5. பகல காளி: வன்முறை காளியாகக் கூறப்படும் இவள், பேய்களின் நாக்குகளை வெளியே இழுப்பவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
6. தக்ஷிணா காளி: வங்காளத்தில் மிகவும் பெருமளவில் போற்றப்படும் தெய்வம் ஆவாள் இவள். மக்களை ஆபத்திலிருந்தும், துரதிர்ஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றுவதாக நம்பப்படும் தெய்வம் இவள்.
7. பைரவி காளி: மரணத்தின் முன்னோடியாகப் பார்க்கப்படுகிறாள். பாதுகாக்கும் தாயாகவும் போற்றப்படுகிறாள். இவள் திரிபுராவில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாவாள்.
8. தாரா காளி: வெளிர் நீல நிற சருமத்தினை உடையவளாகவும், புலித்தோலை உடுத்திக் கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். கடுமை மற்றும் பாதுகாப்புத் தன்மை இரண்டுமே உடையவளாகப் போற்றப்படுகிறாள்.
9. ஷோதோஷி காளி: பக்தர்களை அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் தேவியாகவும், அப்பாவி பெண்ணாகவும், எல்லோரையும் மயக்கும் ரூபம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
10. கமலா காளி: மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்தக் காளி தேவியானவள், இரண்டு யானைகளுடன் காணப்படுகிறாள். இவள் செல்வச் செழிப்பிற்குக் காரணமாக விளங்குகிறாள்.
11. குஹ்ய காளி: மறைந்திருக்கும் பெண் ஆற்றலைக் குறிக்கும் தெய்வமாகத் திகழும் இவள், மாந்திரீக நடைமுறைகளில் மிகவும் நெருக்கம் உடையவளாக அறியப்படுகிறாள்.
12. தூமாவதி தேவி: வாழ்க்கையில் இருண்ட அம்சங்களை பிரதிபலிக்கும் இவள், புராணங்களில் ஒரே விதவை தெய்வமாக அறியப்படுகிறாள்.
இந்துக்களில் சாக்த பிரிவினரால் வணங்கப்படும் ஒரு பெண் சக்தியே காளி என்பவள். தசமஹா வித்யாக்களில் ஒருவராகப் போற்றப்படுபவள். இவளை வணங்குவதால் சர்வாபீஷ்டங்களும் அனுகூலமாகும் என்பது நிதர்சனமான நம்பிக்கை.