
சனி பகவான் நவகிரகங்களில் ஒருவரான சனியை (சனீஸ்வரன்) குறிக்கும் சொல்லாகும். சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், பந்த பாசங்களைத் துறந்து சனிலோகத்தில் வாழ்ந்தவர்.
சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற பல துன்பங்களை தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் நல்ல செயல்களை செய்பவர்களையும், உழைப்பவர்களையும் காப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் என்பதால் இவர் மந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.
‘சனி போல் யாராலும் கொடுக்கவும் முடியாது; கெடுக்கவும் முடியாது’ என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி எந்த அளவிற்கு கஷ்டத்தை கொடுப்பாரோ, அதே அளவிற்கு அள்ளியும் கொடுப்பார். சனியின் அருள் பார்வை பட்டால் பிச்சைக்காரர் கூட அரசனாகி விட முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்ப்பட்டுள்ளது. எனவே, சனியின் முழு அருளை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டுமானால், சனிக்கிழமையில் சனி பகவான் வழிபாடு சிறந்தது.
ஒருவரது ராசிகளில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய, பிறகு அந்த ராசியை விட்டு அடுத்த ராசிக்கு செல்லும்போது அவர் கொடுத்த நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியை கொடுத்து விட்டு செல்வார் என்பது ஐதீகம்.
அந்த வகையில், சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு, தூயஆடை அணிந்து வீட்டில் பூஜை செய்து, மதியம் 12 மணி வரை உணவருந்தாமல் விரதம் அனுஷ்டித்து காகத்திற்கு எள் தயிர் சாதம் வைத்த பின்னர் உணவருந்தலாம்.
காலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, ஏழை எளியோருக்கு அரிசி, கறுப்பு உளுந்து தானமாக வழங்கினால், சனியின் முழு பார்வையும் பெற்று வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பப்படுகிறது.
மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சனிபகவானுக்கு எள் சேர்த்த நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் உங்களால் முடிந்த அளவு ஏழை எளியோருக்கு அரிசி, கருப்பு உளுந்து தானமாக வழங்கலாம்.
சனி பகவான் உடல் ஊனமானவர் என்பதால், உடல் ஊனமானவர்களுக்கு உங்களால் முடிந்ததை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் சனியின் முழு பார்வையும் பெற்று வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பப்படுகிறது.