

கருங்கல் சிற்பமாவது சாதாரண விஷயமல்ல இல்லை. தேர்ந்தெடுப்பதில் தொடங்கி கல் சிற்பம் உருவாகும் வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர் உருவாக்கியுள்ளனர். சிற்பம் வடித்தவுடன் பிரதிஷ்டை செய்ய முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்து பல வழிமுறைகளை கடைபிடித்தே இதைகடவுளாக மாற்றுகிறார்கள்.
ஆகம விதிப்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது மூன்று புண்ணிய நதிகளின் நீரையும் கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்படுகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்கப்படும்
அறிவியல்படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் நிலையில் ஏதேனும் பிளவுகள் ஓட்டைகள் இருந்தால் அதனுள் நுழையும் நீர் குமிழிகளை வெளியேவிடும். இதனால் அது பின்னமான சிலை என்றும் வழிபடத்தக்கதல்ல என்றும் கண்டு பிடித்துவிடலாம். குறையுள்ள சிலையை பிரதிஷ்டை செய்வது அந்த ஊருக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் 48 நாட்கள் ஜலவாசம் செய்த சிலையை அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவிற்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவும் 48நாட்கள் வைக்கப்படுகிறது.
நவதானியங்களோடு நவரத்தினங்கள், பொன், வெள்ளி செப்புக் காசுகள் சேர்த்து இந்த வாசம் நடத்தப்படுகிறது. மன்னராட்சி யில் சிலைகள் மொத்தம் 6 வாசத்தில் வைக்கப்பட்டதாம். ஜலவாசம், தான்யவாசம், பிறகு ரத்தின வாசம், பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயனவாசத்தில் கடவுள் சிலை வைக்கப் பட்டுள்ள ஹம்சதூலிகா எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் மொத்தமாக 288 நாட்கள் வைக்கப்படும். இப்போதுபொற்காசுகள் புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை. எனினும் நவதானியத்தோடு பொற்காசுகள் நவரத்தினங்களும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது. ஜல வாசத்தில் சிலையில் ஓட்டை இருந்தால் தெரிந்துவிடும். தான்ய வாசத்திலும் குறைகள் தெரிந்துவிடும். அதுபோலவே தன் வஸ்திர சயன வாசத்தில் சிலைகள் தெய்வ அதிர்வினைப் பெறும். 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வச் சிலைகளின் கண்கள் பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாட்களுக்கு முன்தான் திறக்கப்படும்.
இத்தனை விதிமுறைகளால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. இதன் பிறகு ஏழு நாட்கள் புஷ்பத்தின் வாசத்தில் சிலைகளை வைக்கிறார்கள். பல்வேறு நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது சிலைகள் மூலிகை சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்திற்குப் பிறகு சயனாதி வாசத்தில் சிலை வைக்கப்படுகிறது. இதன் பிறகு புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்குப் பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன் பிறகு தெய்வச்சிலை முழுமையான அழகு பெறுகிறது.
பிறகு கும்பாபிஷேகத்தின்போது புனித நீர் காப்பு பல்வேறு புனிதப் பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வத்தன்மை கூட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி எனும் கடைசி வாசத்தில் சுவாமியின் நவதுவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி சிலைக்கு அளிக்கப்பட்டு அந்த சிலை முழுமையான கடவுளாக மாறுகிறது.
கல்லில் வடிக்கும் சிலை இவ்வாறு பல்வேறு ஆன்மீக அறிவியல் வழிமுறைகளின் படிதான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான் பல்வேறு பக்குவங்களை அடைந்தால் வணங்கத்தக்கவனாகுவான் என்பதை இந்த வழிமுறைகள் நமக்கு காட்டுகின்றன.