

நம் பாரம்பரியத்தில் துளசிக்கு என்று தனி இடம் உண்டு. அதை ஆன்மிகத்திற்குள் மட்டும் அடைத்து வைக்க முடியாது. அறிவியல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதற்கு தனியாக மாடம் அமைத்து விளக்கு ஏற்றுவது, அதன் இலைகளைப் பறித்து தண்ணீரில் போட்டு பூஜைக்கு பயன்படுத்துவது, காய்ச்சல் ஏற்பட்டால் துளசி சாறை பிழிந்து மருந்தாக அருந்துவது, என்று அவற்றின் பயன்பாட்டை சொல்லி மாளாது. சிலர் துளசி இலையை பூபோல காதில் சொருகி கொள்வதும் உண்டு. கோவிலில் தரும் துளசி தீர்த்தம் தூய்மையானதா? அதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
தெய்வம்
விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் குறியீடாக விளங்குவது துளசி. ஐஸ்வரியத்துக்காக இதனை நட்டு வளர்த்து பராமரித்து வருகிறோம். மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக விளங்கும் துளசி தேவ, அசுரர்கள் பாற்கடலை கடைந்தபோது கிடைத்த சிறப்புமிக்க மூலிகை. மரணத்தைக்கூட தள்ளி வைக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்று நம் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் சவத்தை சிதையில் அடக்கும்போதுகூட துளசிச்செடியின் சுள்ளிகளை சிதையில் போடுவதுண்டு. பாவத்தைப்போக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்ற நம்பிக்கையே இச்செயலுக்குக் காரணம்.
மேலும் எல்லா தேவதைகளும் துளசியில் வசிக்கின்றனர் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் துளசியை அனுதினமும் தெய்வமாகவும் போற்றி வணங்கி வருகிறோம்.
துளசி இலையை காதுக்குப் பின் வைப்பது
சிலர் காதுக்குப் பின் துளசியை வைத்து கொள்வார்கள் அதற்கு முக்கியக் காரணம், உடலிலேயே மிகக் கூடுதலாக உறிஞ்சும் சக்தியை உடையது காதுக்குப் பின்புறம்தான். இதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது . துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம். இந்த மருத்துவகுணங்கள் காதுக்கு பின் உள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும். இதனால்தான் காதுக்குப்பின் துளசி இலையை வைத்துக்கொள்வது.
சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்க வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்டவேண்டும் என்பது பொதுவான விதி. வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் இல்லாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரையை அமைக்கவேண்டும். துளசியை தரையில் நடுவதற்கு கிருஷ்ண துளசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். துளசி செடிப் பக்கம் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டும். துளசியை தினமும் மூன்று வேளை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும்போது,
"பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீரோதமதநோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்"
என்ற மந்திரம் சொல்லவேண்டும்.
மாலை நேரம், ஏகாதசி, செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசியைப் பறிக்கக் கூடாது என்பது நடைமுறை பூஜை விதி. பூஜைக்கு அல்லாமல் இதர தேவைகளுக்கு அன்றி அவற்றை பறித்து வீணாக்கக்கூடாது என்பது நாம் பின்பற்ற வேண்டிய செயல்கள் ஆகும்.
துளசி தீர்த்த நன்மை
கிளஸ்டர்ட்வாட்டர் (Clustered water) என்ற பெயரில் மேல் நாட்டவர் கண்டுபிடித்து இருக்கும் பரிசுத்த நீருக்கு நிகராக நிற்பதே துளசி தீர்த்தம். நீர் அசுத்தம் ஆகுதல் குறித்து ஆராய்ச்சி செய்த அமெரிக்க விஞ்ஞானிகள் கிளஸ்டர்ட் வாட்டரை கண்டுபிடித்தனர்.
நவீன முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் இரண்டு துளிகள் ஒரு டம்ளர் சாதாரண நீரில் சேர்த்து குடிக்கின்றனர். ஆனால் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து கிடைக்கும் துளசி தீர்த்தம் கிளஸ்டர்ட் வாட்டர்க்கு நிகரான பரிசுத்தமுடையது என்று இந்திய விஞ்ஞானிகள் சோதனையின் மூலம் நிரூபித்துள்ளனர்.
ஒரு குடத்து நீரில் 10 துளசி இலைகளை பறித்துப்போட்டு அந்த நீரை அருந்தி வந்தால் இந்த நீருக்கு சமமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஆன்மிகமாக நாம் கருதும் துளசியில் அறிவியல் தொழில்நுட்பம் அடங்கியுள்ளது என்பதை நாம் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதையும் பின்பற்றி நம் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்.