
ஆயிரம் காளியம்மன் கோவில் காரைக்கால் மாவட்டம் புதுச்சேரியில் உள்ள திருமலைராயன்பட்டினம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மனின் சிலை முழுக்க முழுக்க மரத்தால் ஆனது. அதுவே அதனுடைய சிறப்பம்சமாகும். இந்த கோவில் உருவான கதையைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
முன்னொருக்காலத்தில், கலிங்க அரசன் நாட்டின் நலனுக்காக காளியை ஆயிரம் பொருட்களைக் கொண்டு வழிப்பட்டான். ஒருநாள் வழிப்பாட்டு பொருட்கள் இல்லாமல் தவித்த அரசனிடம் திருமலைராயன்பட்டினம் மக்கள் தங்களை படையலிடும்படிக் கூறினர்.
இதனால் மனம் நெகிழ்ந்த காளியம்மன் மன்னனின் கனவில் தோன்றி, தான் அம்மக்களுக்காக திருமலைராயன்பட்டினத்தில் கோவில் கொள்ளப்போவதாக தெரிவித்தார். அதனால் மன்னனின் இறுதிக் காலத்தில் தன்னை பேழையில் வைத்து கடலில் விடுமாறு கூற, மன்னனும் அவ்வாறே செய்தான்.
அந்த பெட்டி கடலில் மிதந்து திருமலைராயன்பட்டினம் வந்து சேர்ந்தது. மக்கள் அதை புதையல் என்று எண்ணி வலை வீசினாலும், யாருக்கும் அகப்படவில்லை. இந்நிலையில் செங்குந்த முதலியார் கனவில் தோன்றிய காளியம்மன், 'நான் கடலில் தவழ்கிறேன். என்னை கொண்டு வந்து வழிப்படுங்கள்' என்று கூறினார். விடிந்ததும் அவர் அம்மன் பேழையை கடலில் இருந்து எடுத்து மணிப்பீடத்தில் வைத்து வழிப்படத் தொடங்கினார்.
இதைப் பார்த்த பக்தர்கள் அங்கே திரண்டனர். பின்பு பேழையை திறந்து அதிலிருந்த ஓலைச்சுவடியில் இருந்த பூஜை முறையை அறிந்து வழிப்பட்டனர். அந்த ஓலைச்சுவடியில் அம்மனை ஆயிரம் பொருட்கள் கொண்டு வழிப்பட வேண்டும் என்று இருந்தது.
ஆயிரம் பொருட்களைக் கொண்டு தினமும் வழிப்படுவது என்பது முடியாதக் காரியம் என்பதால், அம்மனை ஐந்தாண்டுக்கு ஒருமுறை பூஜிக்கலாம் என்று முடிவெடுத்தனர். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைப்பெறும் திருவிழாவைக் காண பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து வருவார்கள்.
ஆயிரம் காளியம்மன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியிலே எழுந்தருள்வார். ராஜசோலீஸ்வரர் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் ஆயிரம் சீர்வரிசைப் பொருட்களால் அம்மனை பூஜித்து மீண்டும் பேழையில் வைப்பார்கள். பெட்டியில் இருக்கும் மஞ்சள் மற்றும் எலுமிச்சை அன்னையின் அருளால், ஐந்து வருடம் கெடாமல் அப்படியே இருக்கும்.
ஆயிரம் காளியம்மனின் அடுத்த தரிசனம் 2027 வைகாசி வளர்பிறையில் நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.